அரசின் " நிவர்" சாதனை - ஸ்டாலின் விமர்சனம்

சென்னையில், புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் காப்பாற்ற, அரசு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-11-27 12:29 GMT
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேங்கி நிற்கும் தண்ணீரைப் பற்றிக் கவலைப்படாமல், பேட்டியளிப்பது மட்டுமே, "நிவர் சாதனை" என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் செயல்படுவது மிகுந்த வேதனையளிப்பதாக, கூறி உள்ளார். சென்னையில் மழைநீர் வடிகால் கால்வாய்களைச் சீரமைக்காததால், குறைந்தபட்ச மழையைக் கூட தாங்க முடியாமல், மக்களைத் தவிக்க விட்டுள்ளதாக அரசு மீது குற்றம்சாட்டி உள்ளார். தெருக்களிலும், வீடுகளிலும் புகுந்த வெள்ளம் இன்னும் பல இடங்களில் வடியவில்லை என்றும், சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர் போன்ற பகுதிகளில் புகுந்த வெள்ள நீர் வெளியேற்றப்படவில்லை எனவும், தமது அறிக்கையில் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார். பல்வேறு மாவட்டங்களில், வேளாண் விளைபொருட்கள் சேதமடைந்துள்ள நிலையில், கணக்கு எடுக்கிறோம் என்று காலம் கடத்தாமல், உரிய இழப்பீட்டை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அதேபோல், வீடுகள் இழப்பு - உடைமைகள் இழப்பு உள்ளிட்ட இழப்பீட்டுத் தொகையையும், உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியையும் அளித்திட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அதே நேரம், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து, தவித்துக் கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்கு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்