கொரோனா தொற்றால் 33 வயது பெண் என்ஜினியர் உயிரிழப்பு - இரட்டை குழந்தைகள் பிறந்த 2 நாட்களில் நேர்ந்த சோகம்
இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையும் உயிரிழப்பு ஒரே நேரத்தில் இரண்டு உயிர்களை இழந்து நிற்கும் குடும்பம் அதிர்ச்சி அளிக்கும் நண்பர்களின் சமூக வலைதள பதிவுகள்;
சென்னையில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த 2 நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியவர்களுக்கு மட்டுமே பாதிப்பு என அஜாக்கிரதையாக இருப்பவர்களுக்கு அண்மை காலமாக நிகழும் இளவயது மரணங்கள் எச்சரிக்கை மணி அடிப்பது போல் அமைந்துள்ளது. கொரோனா தொற்றால் சென்னை மாநகரமே திக்கு முக்காடி கொண்டிருக்கிறது. ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்ட முதியவர்கள் மட்டுமே கொரோனாவின் கோரப் பசிக்கு பலியாகி கொண்டிருந்தனர். தற்போது இளம் வயது கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்கு பிறகு உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராமாவரம் சத்யா நகரைச் சேர்ந்த 33 வயது கர்ப்பிணியான சாப்ட்வேர் என்ஜினீயர் , ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு இரட்டை குழந்தைகள் இருப்பதை அறிந்த அவரும் அவரது குடும்பத்தினரும் சந்தோஷமடைந்துள்ளனர். இவர் கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை, மன அழுத்தம் போன்ற உடல்நிலை பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். இந்நிலையில் மூச்சு திணறல் காரணமாக கடந்த 23ஆம் தேதி திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் கொரோனோ பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது, அவரது குடும்பத்திற்கு பேரிடியாக விழுந்தது. பிறக்கப்போகும் குழந்தைகள் பற்றிய பல்வேறு கனவுகளுடனும் ஆசைகளுடனும் இருந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது பெரும் துயரமான செய்தியாக இருந்துள்ளது. இருந்த போதிலும் மன தையரியத்துடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு எழும்பூர் அரசு தாய் சேய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த 27 ஆம் தேதி அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு குழந்தை பிறந்த உடன் இறந்துவிட்ட நிலையில் மற்றொரு குழந்தை தீவிர கண்காணிப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தொற்று பாதித்த தாயின் உடல்நிலை மோசமடைய அவரும் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துள்ளார். கொரோனா எனும் கொடிய அரக்கனுக்கு தாயும்,ஒரு குழந்தையும் பலியாகி விட மற்றொரு குழந்தையுடன் செய்வதறியாது தவித்து வருகின்றார், இரண்டு உயிர்களை இழந்த தந்தை. தோழியை இழந்து தவிக்கும் ஐ.டி. ஊழியர்கள் சமூக வலைதளத்தில் தங்களது வேதனையை பதிவு செய்து வருகின்றனர். ஒரே ஒரு முறை மட்டும், மருத்துவ சோதனைக்காக முக கவசம் அணிந்து வெளியே சென்ற பெண்ணுக்கு இப்படி ஒரு நிலையா என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பெரியவர்களுக்கு மட்டுமே பாதிப்பு என்ற எண்ணம் அதிகம் உள்ளதாக கூறும் மற்றொரு நண்பரின் பதிவு கொரோனா பற்றி தான் நமக்கு எல்லாமே தெரியுமே என்ற எண்ணம் தான் மக்கள் மத்தியில் அதிகம் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். இதேபோல் நேற்றைய தினம் சென்னையில் 17 வயது பெண் ஒருவர் கொரோனோ தொற்றால் உயிரிழந்துள்ளார். அண்மைக்காலமாகவே இளம் வயதினரும் கொரோனோ தொற்று பாதிப்பால் உயிரிழக்கும் சம்பவம் பொது மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.