அண்ணா பல்கலை. சிறப்பு அந்தஸ்து விவகாரம் - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் ஆலோசிக்க முடிவு

சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசுடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசித்து வழங்கும் முடிவின் அடிப்படையில் தமிழக அரசு முடிவெடுக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-05-21 03:25 GMT
அண்ணா பல்கலை கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கடந்தாண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர்கள் குழு பரிந்துரையின் பேரில் அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவெடுத்த தமிழக அரசு மேலும் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவிகித இடஒதுக்கீட்டை தொடருவது குறித்தும் மத்திய அரசிடம் விளக்கம் கோரப்பட்டது. இதற்கு மத்திய அரசு தரப்பிலிருந்து உரிய பதில் கிடைக்காத நிலையில் சிறப்பு அந்தஸ்தை ஏற்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக மே மாத இறுதிக்குள் தமிழக அரசு தனது முடிவினை தெரிவிக்குமாறு மத்திய அரசு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டது. இந்த கடிதம் தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசு அமைத்த அமைச்சர்கள் குழு அண்ணா பல்கலை துணைவேந்தர், உயர் கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் நேற்று முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர். இதில்  69 சதவீத இடஒதுக்கீடு முறைக்கு பாதிப்பின்றி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனை மேற்கொண்டு அதன் முடிவுகளை தமிழக அரசிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு அந்தஸ்தை ஏற்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும் என தெரிகிறது.
Tags:    

மேலும் செய்திகள்