பாலாறு விவகாரம் : "நடவடிக்கை எடுங்கள்" - அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

பாலாறு விவகாரத்தில், முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-07-24 09:13 GMT
பாலாறு விவகாரத்தில், முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பணைகள் கட்டும் பணிகள் மேற்கொண்டு வருவதை, அதிமுக அரசு தொடர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். 5 மாவட்டங்களின் நீர் ஆதாரங்கள், வேளாண்மை, குடிநீர்த் தேவை ஆகியவற்றை மோசமான பாதிப்பிற்கு உள்ளாக்கும் இந்த விவகாரத்தை, முதலமைச்சர் கண்டுகொள்ளாமல் இருப்பது கவலை அளிப்பதாகவும், ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தடை ஆணை கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அதிமுக அரசு, இன்று வரை தடை உத்தரவு பெற முடியாமல், சட்டப் போராட்டத்தில் தோல்வியடைந்து நிற்பதாகவும், அவர் விமர்சித்துள்ளார். ஆகவே தடுப்பணைகள் கட்டும் பணியை உடனே தடுத்து நிறுத்தவும், ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் ஆந்திர அரசுக்கு எதிராக அவசர தடை உத்தரவு பெற்றிடவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் தமது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்