11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு : விசாரணையை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரிய வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Update: 2019-07-03 09:44 GMT
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக வாக்களித்ததாக  ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தி.மு.க கொறடா சக்கரபாணி, தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இதேபோல் சபாநாயகர் நோட்டீசை எதிர்த்து பிரபு உள்ளிட்ட 3 எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த இரண்டு வழக்குகள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று நடைபெற்றது.

அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், இரண்டு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்கலாம் என்று கூறினார். ஆனால் 3 எம்.எல்.ஏ.கள் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மற்றும் தமிழக சட்டப்பேரவை செயலர் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு வழக்குகளும் வேறு வேறு தன்மை கொண்டது என்று தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம், இரண்டு வழக்குகளும் ஒரே நாளில் தனித்தனியாக விசாரிக்கப்படும் என்று அறிவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்