தனியார் வங்கியில் ரூ.1.5 கோடி மதிப்பிலான நகைகள் மாயம் : ரகசியமாக விசாரணை நடத்தி வரும் போலீசார்
திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கியில், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில், பிரபல தனியார் வங்கி ஒன்றில் கடந்த மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற வங்கி தணிக்கையின் போது, லாக்கரில் உள்ள அடமான நகைகள் சரிபார்க்கப்பட்டது. அப்போது நகைகள் சரியாக இருந்த நிலையில், நபர் ஒருவர் கடந்த வாரம் வங்கியில் வைத்த தனது நகைகளை மீட்க தொகை முழுவதையும் கட்டியும், அவர் சில நாட்கள் அலைக்கழிக்கப்பட்டார். அப்போது தான் லாக்கரில் இருந்த நகைகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது.
இதையடுத்து லாக்கரை சரிபார்த்த போது லாக்கரில் இருந்த ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான, 40 பேரின் நகைள் மாயமானது தெரியவந்தது. 3 நாட்கள் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமிராவும், அதில் இருந்த வங்கி வீடியோ பதிவுகளும் மாயமானது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், நகை மதிப்பீட்டாளர்கள் மற்றும் வங்கி ஊழிர்கள் என 5 நபர்களிடம் 4 நாட்களாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் வங்கி ஊழியர்களே மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்நிலையில் நகைகள் மாயமாகவில்லை, வேறு காரணங்களுக்காக காவல்துறையிடம் உதவி கேட்கப்பட்டுள்ளதாக முன்னுக்கு பின் முரணாக வங்கி மேலாளர் பதில் அளித்துள்ளார். இதனால் வங்கியில் நகைகளை அடமான வைத்த மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.