அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா : "சிவ சிவா" பக்தி முழக்கமிட்டபடி தேரோட்டம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2019-05-19 20:26 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பார்வதியை தன் உடல் பாகமாகக் கொண்ட அர்த்தநாரீசுவரர் ஆகியோர் எழுந்தருளினர். இதன்பின்னர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. சிவ-சிவா என பக்தி முழக்கமிட்டபடி பக்தர்கள் தேரை இழுத்தனர்.




சூரியனார் கோயிலில் சிவசூரியப் பெருமானுக்கு மகா அபிஷேகம் 

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார் கோயிலில்  சூரியனை மூலவராகக் கொண்டு ஏனைய கிரகங்கள் தனித்தனி சன்னதிகளில் அவர்களுக்குரிய வாகனங்களோடு எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். நவக்கிரகங்களுக்கு என அமைந்துள்ள இந்தக் கோயிலில் தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில் சூரியனுக்கு மகா அபிஷேகம் நடைபெறும். இதன்படி வைகாசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள், சூரியனுக்கு சிறப்பு ஹோமம் நடத்தி மகா அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். இதையொட்டி, உற்சவர் உஷாதேவி சாயாதேவி உடன், சூரிய பெருமானுக்கு வெள்ளி கவசம் சாத்தி சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. 





திரவுபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் 

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த கல்வாய் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம் நடைபெற்றது. இதற்காக மூலவர் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து நடைபெற்ற துரியோதனன் படுகளத்தை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். பின்னர் பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். 




அக்னி வசந்த மகோற்சவ விழா : பாஞ்சாலி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் 

ஆரணி அருகே பாஞ்சாலியம்மன் கோயிலில் அக்னிவசந்த மகோற்சவ விழாவையொட்டி துரியோதனன் படுகளம் நடைபெற்றது. இதனையொட்டி கோவில் வளாகத்தில் துரியோதனன் மற்றும் பீமன் சிலைகள் மண்ணால் செய்யப்பட்டிருந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் துரியோதனன் படுகள நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்