வங்கி கணக்கில் பணம் திருடிய மெகா கும்பலை மடக்கியுள்ள சென்னை போலீஸ்...

கடன் பெற்றுத் தருவதாக வங்கி கணக்கில் பணம் திருடிய மெகா கும்பலை சென்னை போலீசார் மடக்கியுள்ளனர்.

Update: 2019-02-15 02:57 GMT
சொந்த தொழில் செய்ய விரும்புவோர், வங்கி பரிவர்த்தனைகளை போனில் முடிக்க விரும்புவோர்களை குறிவைத்து 200 பேருடன் கால் சென்டர் நடத்தி, தகவல் திருட்டு மூலம் பணம் சுருட்டிய கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பிடித்துள்ளனர். தனியார் நிதி நிறுவனங்களில் வேலை பார்த்த அனுபவத்தை வைத்து தேனாம்பேட்டை, சூளைமேடு, வடபழனி உள்ளிட்ட இடங்களில் டெலிகாலர் நிறுவனங்கள் நடத்திய கும்பல், இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளது. மோசடிக்கு மூளையாக செயல்பட்ட 7 பேரை கைது செய்த போலீசார், மேலும், இருவரை தேடி வருவதாகவும், அவர்கள் மூலம் பல உண்மைகள் வெளிவரும் என்றும் கூறினர். அல்ட்ரா டிரன்ட்ஸ் என்டர்பிரைஸசஸ், டிரை டெக் அசோசியேட்ஸ், க்ரிஸ் கன்சல்டன்சி சர்வீஸஸ், சென்ட் டெக் கார்ப், ஃபெதர் லைட் டெக் உள்ளிட்ட 9 போலியான நிறுவனங்கள் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

3 மாதங்களுக்கு ஒருமுறை அலுவலகங்களை இடமாற்றம் செய்யும் மோசடிக் கும்பல், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரங்களை பெறுவதும், அதற்கான பணியாட்களை தேர்வு செய்வதும் அதிர்ச்சி ரகம்...வங்கிகள் ரகசிய எண்களை கேட்பதில்லை என்று கூறும் போலீசார், எப்படி தங்கள் கணக்குகளை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் விளக்கினர். ஒன்றரை ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய மோசடிக் கும்பலை பிடித்த போலீசார், போலி பான்கார்டுகள், செல்போன்கள், காசோலை புத்தகங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.  
Tags:    

மேலும் செய்திகள்