குட்கா விவகாரம் : மாதவராவின் மேலாளர்கள் உள்பட 6 பேரிடம் சி.பி.ஐ. தீவிர விசாரணை

குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவின் மேலாளர்கள் 4 பேர் உள்பட 6 பேர் சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

Update: 2018-09-10 07:43 GMT
குட்கா முறைகேடு விவகாரம் தொடர்பாக, தமிழகம், புதுச்சேரி, மகாராஷ்டிராவில் உள்ள 35 இடங்களில் கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரிடம் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர் உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் உள்ளிட்டோரை சிபிஐ கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். இந்நிலையில், மாதவராவுக்கு சொந்தமான இடங்களில், ஏதேனும் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து சிபிஐ ரகசிய சோதனை நடத்தி வந்தது. அதன்படி புதுச்சேரி, திருபுவனை பகுதியில் உள்ள மாதராவுக்கு சொந்தமான சீனிவாசா கெமிக்ஸ் என்ற நிறுவனத்தின் மேலாளர்கள் 4 பேர் உள்பட 6 பேர், சென்னை நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில், ஆஜராகியுள்ளனர். சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவை  குறித்து சிபிஐ அதிகாரிகளிடம் அவர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்