தென்மேற்கு பருவமழை : எதிர்பார்த்ததை விட தமிழகத்திற்கு அதிக அளவில் மழை

தென்மேற்கு பருவமழை முடிவடைய இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், எதிர்பார்த்ததை விட அதிக அளவில் தமிழகத்திற்கு மழை கிடைத்துள்ளது.

Update: 2018-08-29 04:00 GMT
ஆண்டுதோறும் ஜூன் 1ம் தேதி கேரளாவில் தொடங்கும் பருவ மழை, தென் இந்திய மாநிலங்களில் பரவி, மஹாராஷ்டிரா, கோவா, குஜராத் என வட மாநிலங்களுக்கும் வளம் சேர்த்து, செப்டம்பர் 30ம் தேதி முடிவுக்கு வருவது வழக்கம். 

ஆகஸ்ட் 28 வரையிலான வானிலை ஆய்வு மைய புள்ளி விவரங்களின்படி, தமிழகத்தில் இதுவரை 168 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதாவது சராசரி அளவில் 87 சதவீதம் கிடைத்துள்ளது. மீதம் உள்ள ஒரு மாதத்தில் 100 சதவீரத்தை எட்ட வாய்ப்புள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். 

மாவட்ட வாரியாக பார்த்தால், பல மாவட்டங்களில் சராசரியை விட பல மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது. சென்னைக்கு, தென் மேற்கு பருவத்தில் கிடைக்கும் 306 மில்லி மீட்டர்  மழை தற்போதே கிடைத்து விட்டது. 

இதுபோல, கேரளா, கர்நாடகா மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள் மாவட்டங்களிலும் மழையின் தாக்கம் பல மடங்கு அதிகம். 

கோவையில் சராசரி மழை அளவு 116 மில்லி மீட்டர் என்ற நிலையில், இந்த ஆண்டு 534 மில்லி மீட்டர் பெய்துள்ளது. இதுபோல, தேனியில் 84 மில்லி மீட்டர் சராசரி என்ற நிலையில் 350 மில்லி மீட்டர் பெய்துள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களும் வழகத்தை விட, 3 மடங்கு அதிக மழை பெற்றுள்ளன. 

அதே போல, திருநெல்வேலியில் 173 சதவீதமும் கன்னியாகுமரியில் 46 சதவீதமும் நீலகிரியில் 16 சதவீதமும் கூடுதலாக மழை பெய்துள்ளது. 

ஒரு புறம் குடகு பகுதியில் கன மழையால் காவிரி ஆர்ப்பரித்து ஓட, மறு புறம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மழையும் இதுவரை சரியாகவே கிடைத்திருப்பது, விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியே!

Tags:    

மேலும் செய்திகள்