சென்னை மாநகராட்சியிடம் லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை

லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை; சென்னை மாநகராட்சி மீது மக்கள் விரக்தி என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வேதனை.

Update: 2018-08-14 10:01 GMT
சென்னை ஷெனாய் நகர் பகுதியில் தனது வீட்டின் முன்புறம் மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரை அகற்றக் கோரி லட்சுமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகி இருந்தார். அப்போது, சட்ட விரோத கட்டுமானங்கள் மற்றும் முறைகேடுகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர் பட்டியலிட்டார். இதையடுத்து, மாநகராட்சி நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி, சட்ட விரோத கட்டுமானங்களை தடுக்க, எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் இருப்பது சென்னை மக்களை விரக்தி அடைய செய்துள்ளதாக தெரிவித்தார். கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்திய நீதிபதி, விதிகளை பின்பற்றி கட்டிட ஒப்புதல்கள் வழங்கப்படுகிறதா? சட்ட விரோத கட்டுமானங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து பதிலளிக்குமாறு மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். மேலும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்றும் மாநகராட்சி அதிகாரிகளின் சொத்து விவரங்கள் மற்றும் மாநகராட்சி ஊழல் கண்காணிப்பு பிரிவின் செயல்பாடுகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். லஞ்சம் கொடுக்காமல் கட்டிட ஒப்புதல் உள்ளிட்ட எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை உள்ளதால் மக்கள் விரக்தி அடைந்துள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூலிக்காத அதிகாரிகள் மீது மாநகராட்சி ஆணையர் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளார் என்பது குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 27 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


 


Tags:    

மேலும் செய்திகள்