மத்திய அமைச்சர் பேச்சுக்கு காங்.எம்.பி.க்கள் கண்டனம் - அமளி காரணமாக மக்களவை இருமுறை ஒத்தி வைப்பு
மக்களவையில் ராகுல் காந்தி குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு முறை ஒத்தி வைக்கப்பட்டது.;
டெல்லியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய இளைஞர்கள் இன்னும் ஆறு மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, தடி கொண்டு அடிப்பார்கள் என்றார்.
இதற்கு நேற்று குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தம்முடைய முதுகை வலிமையாக்கி கொள்ள சூரிய நமஸ்காரங்கள் செய்வேன் என, ராகுல்காந்தியின் பேச்சுக்கு மறைமுகமாக பதில் அளித்து பேசினார்.
இந்நிலையில் இன்று மக்களவையில் பேசிய ஹர்ஷவர்தன், ராகுல்காந்தியின் பேச்சுக்கு கண்டனத்தை பதிவு செய்வதாக குறிப்பிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சலிட்டனர். பதிலுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர். உறுப்பினர்களின் கடும் அமளி காரணமாக அவையை ஒரு மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்தி வைத்தார். ஒத்தி வைக்கப்பட்ட அவை மீண்டும் கூடியதும், அமளி தொடர்ந்ததால் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.