காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

134 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட , சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

Update: 2019-05-25 04:53 GMT
சுதந்திர இந்தியாவின் முதல் முப்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, 1977 ஆம் ஆண்டு  பொதுத்தேர்தலில் படுதோல்வி அடைந்து, ஆட்சியை ஜனதா கட்சியிடம் இழந்தது. 

* பின்னர் 1980 இல் நடந்த பொதுத் தேர்தலில், 42.69 சதவீத வாக்குகளை பெற்று, 374 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியை பிடித்து  இந்திரா காந்தி, மீண்டும் பிரதமரானார். 

* 1984  ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அதுவரை அரசியலில் ஈடுபடாத அவரது மகன் ராஜிவ் காந்தி அரசியலில் களமிறங்கி பிரதமரானார். 

* அதனைதொடர்ந்து 1984 டிசம்பரில் நடந்த பொதுத்தேர்தலில், 48.12 சதவீத வாக்குகளை பெற்று, 414 இடங்களில் வென்றது காங்கிரஸ். சுதந்திர இந்தியாவில் வேறு எந்த பிரதமருக்கும் இத்தகைய பெருபான்மை பலம் இன்று வரை கிடைத்ததில்லை. 

* போபர்ஸ் ஊழல் மற்றும் இதர ஊழல் குற்றச்சாட்டுகளை ராஜிவ் காந்தி அரசு மீது சுமத்தி, காங்கிரஸ் கட்சியில் இருந்து வி.பி.சிங் வெளியேறினார். அவரது தலைமையில் உருவான ஜனதா தளம் கட்சி 1989 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் 197 தொகுதிகளில் மட்டும் வென்றது காங்கிரஸ். 

* உட்கட்சி பூசலால் வி.பி.சிங் ஆட்சியை இழக்க, காங்கிரஸ் உதவியுடன் சந்திரசேகர் பிரதமரானார். 1991இல் சந்திரசேகர் அரசு கவிழ்ந்ததால், மீண்டும் பொதுத் தேர்தல் வந்தது. தேர்தல் நடந்த சமயத்தில் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். இது இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி மீது அனுதாப அலையை ஏற்படுத்தியதால், 1991 ஆம் ஆண்டு தேர்தலில், 35.66 சதவீத வாக்குகள் பெற்று, 244 இடங்களில் வென்ற காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைத்தது. நரசிம்ம ராவ் பிரதமரானார். மன்மோகன் சிங் நிதியமைச்சராக பொறுப்பேற்றார். பொருளாதார சீர்திருத்தங்களை நரசிம்ம ராவ் அரசு மேற்கொண்டு, தாரளமயமாக்கல் கொள்கைகளை அறிமுகம் செய்தது. 

* 1996 பொதுத் தேர்தலில் 28.80 சதவீத வாக்குகளை பெற்று, 140 இடங்களில் மட்டும் வென்ற காங்கிரஸ், ஆட்சியை இழந்தது. பெரும்பான்மை இல்லாமல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி கவிழ்ந்ததால், தேவ கவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியை வெளியில் இருந்து காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. 

* 1997ல் தேவகவுடா ஆட்சிக்கான ஆதரவை காங்கிரஸ் விலகிக் கொண்டதை அடுத்து, ஐ.கே.குஜரால் தலைமையிலான ஆட்சி அமைந்தது. ஓராண்டு நீடித்த இந்த ஆட்சிக்கான ஆதரவையும் காங்கிரஸ் திரும்ப பெற்றதால், 1998 பொதுத் தேர்தலில் நடைபெற்றது. இதில் 26.14 சதவீத வாக்குகளைப் பெற்று, 141 இடங்களில் மட்டும் காங்கிரஸ் வென்றது. வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. 

* 1999இல் வாஜ்பாய் அரசு கவிழ்ந்ததினால், மீண்டும் பொதுத் தேர்தல் வந்தது. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி தலைவராக சோனிய காந்தி தேர்ந்தெடுக்கபட்டார். இதை எதிர்த்து சரத் பவார் தலைமையில் ஒரு அணியினர், காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி, தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார்கள். 1999 பொதுத் தேர்தலில், 28.30 சதவீத வாக்குகளை பெற்ற காங்கிரஸ், 114 இடங்களில் மட்டும் வென்றது. வாஜ்பாய் தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தது. 

* 2004 பொதுத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைக்கப்பட்டது. திமுக உள்ளிட்ட பல மாநில கட்சிகள் இதில் இணைந்தன. 2004 பொதுத் தேர்தலில், 26.70 சதவீத வாக்குகள் பெற்று, 145 இடங்களில் காங்கிரஸ் வென்றது. கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைத்தது. மன்மோகன் சிங் பிரதமரானார். 

* அதனைதொடர்ந்து 2009 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, 28.55 சதவீத வாக்குகள் பெற்று, 206 இடங்களில் வென்று, மீண்டும் கூட்டணி ஆட்சி அமைத்தது. 2ஜி ஊழல் மற்றும் இதர ஊழல் குற்றச்சாட்டுகளை சந்தித்த மன்மோகன் சிங் ஆட்சி, 2014 பொதுத் தேர்தலில், 19.52 சதவீத வாக்குகளை மட்டும் பெற்று, 44 இடங்களில் மட்டும் வென்று, ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் கட்சியின் வரலாற்றிலேயே இது தான் மிக மோசமான தோல்வி ஆகும். 

* மோடி தலைமையில் பாஜக ஆட்சியை பிடித்தது. 2017இல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கபட்டார். 2019 பொதுத் தேர்தலில், 52 இடங்களில் மட்டும் வென்றது காங்கிரஸ். ஒரு காலத்தில் இந்தியாவிலேயே மிக வலிமையான கட்சியாக திகழ்ந்த, காங்கிரஸ் இன்று வலுவிலந்த நிலையில் உள்ளது. மீண்டும் இழந்த பலத்தை மீட்டெடுக்க, கடுமையான முயற்சிகளை செய்ய வேண்டியிருக்கும். 
Tags:    

மேலும் செய்திகள்