ஜெயலலிதா தொடர்பாக விசாரணை ஆணையத்தில் சசிகலா மற்றும் மருத்துவர் சிவக்குமார் அளித்த தகவலில் பல்வேறு முரண்பாடுகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா மற்றும் மருத்துவர் சிவக்குமார் அளித்த தகவலில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

Update: 2018-06-19 07:51 GMT
ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பிரமாண பத்திரமும், ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார் நேரடியாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதில், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி இரவு 7 மணியளவில், தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கார்டன் வருமாறு சசிகலா அழைத்ததாகவும், அப்போது ஜெயலலிதாவுக்கு இருமல், காய்ச்சல் இருப்பதாகவும் சசிகலா கூறினார் என சிவக்குமார் கூறியுள்ளார். ஆனால், சசிகலா அளித்த பிரமாண பத்திரத்தில் மருத்துவர் சிவக்குமாரை  தொலைபேசியில் அழைத்தது தொடர்பான தகவல் இல்லை. செப்டம்பர் 22ம் தேதி 3வது முறையாக ஜெயலலிதாவை  இரண்டாம் தளத்தில் உள்ள அவருடைய அறையில்  பார்த்தபோது, சசிகலா மட்டுமின்றி 2 பணிப்பெண்கள் இருந்ததாக சிவக்குமார் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். ஆனால்,  சசிகலா அளித்த பிரமாண பத்திரத்தில் 2 பணிப்பெண்கள் குறித்த தகவல் இல்லை. 

செப்டம்பர் 22 அன்று இரவு, ஜெயலலிதா கழிவறை செல்வதாக சொல்லிவிட்டு சென்றதாகவும், அப்போது சசிகலாவை உடன் அழைத்துச்செல்ல நான் அறிவுறுத்தினேன் என்றும், சசிகலா கழிவறையின் வெளிப்பகுதியில் நிற்க ஜெயலலிதா வெளியே வந்து அவரே படுக்கையில் அமர்ந்து கொண்டதாகவும், பின்னர் கடுமையான இருமல் வந்து அப்படியே தன்மீதும், சசிகலா மீதும் சாய்ந்துக்கொண்டார் என வாக்குமூலத்தில் சிவக்குமார் கூறியுள்ளார். ஆனால், சசிகலா தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் செப்டம்பர் 22 இரவு 9:30 மணியளவில் குளியலறைக்கு சென்ற ஜெயலலிதா, ' சசி மயக்கமாக இருக்கிறது இங்கே வா' என்று அழைத்ததாகவும், அவரை உள்ளே சென்று சசிகலா அழைத்து வந்து படுக்கையில் உட்கார வைத்ததாகவும், அப்போது மயங்கிய நிலையில் ஜெயலலிதா தன் தோளில் சாய்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 

குறிப்பாக அப்போது தான் அறைக்குள் டாக்டர் சிவக்குமார் வந்ததாகவும் சசிகலா பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார். ஜெயலலிதா மயங்கியவுடன் ட்ராலியில் இருந்த அழைப்பு மணியை அழுத்தி,  அழைத்ததின் அடிப்படையில்  தனிப் பாதுகாவலர்கள் அறைக்குள் வந்ததாக சசிகலா கூறியுள்ளார். ஆனால், தான் சத்தம் போட்டு அழைத்ததாலேயே தனிப் பாதுகாவலர்கள் அறைக்குள் வந்ததாக சிவக்குமார் கூறியுள்ளார். ஜெயலலிதா மயங்கியவுடன் அவரது அறைக்கு தனிப் பாதுகாவலர்கள் வீரப்பெருமாள், கந்தசாமி, மற்றும் ஓட்டுநர் கண்ணன் மற்றும் பணியில் இருந்த வீட்டு பணியாளர்கள் வந்ததாக சசிகலா கூறியுள்ளார். 

ஆனால் அப்போது வீரப்பெருமாள், கந்தசாமி உட்பட 2 பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமே வந்ததாக சிவக்குமார் கூறியுள்ளார். ஓட்டுநர் கண்ணன் வந்ததும் வீட்டில் பணிபுரிபவர்கள் அறைக்கு வந்ததாக சிவக்குமார் தன்னுடைய வாக்குமூலத்தில் கூறவில்லை. 

அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் போதே கிரீம்ஸ் சாலை அருகே ஜெயலலிதாவுக்கு  நினைவு திரும்பி, கண் விழித்து தன்னிடம் 'எங்கிருக்கிறேன்' என கேட்க, "அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்கிறோம்.. கவலைப்படாதீங்க" என பதிலளித்ததாக சசிகலா  கூறியுள்ளார். ஆனால் ஆம்புலன்சில் செல்லும் போது சசிகலாவிடம் 'எங்கிருக்கிறேன்' என ஜெயலலிதா கேட்டதாக சிவக்குமார் கூறவில்லை. மாறாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று 15 நிமிடம் கழித்து சில சோதனைகள் முடிந்த பின்னரே தன் பெயரை குறிப்பிட்டு 'எங்கே இருக்கிறோம்' என ஜெயலலிதா கேட்டதாக சிவக்குமார் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்