22 வீரர்கள் உயிரிழப்பு; வீரர்களின் தியாகம் வீண் போகாது - அமித்ஷா

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளால் பாதுகாப்பு படை வீரர்கள் 22 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-04-04 17:56 GMT
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளால் பாதுகாப்பு படை வீரர்கள் 22 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். வீரர்களின் தீயாகத்தை, தியாகத்தை, தேசம் மறக்காது என்றும், அவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக ராம்நாத்கோவிந்த் தமது டுவிட்டர் செய்தியில் கூறி இருக்கிறார்.  இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது என்றும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என்று தமது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

வீரர்களின் தியாகம் வீண்போகாது என, உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். சத்தீஷ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து முதலமைச்சருடன் தொலைபேசியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். தொடர்ந்து, மத்திய ரிசர்வ் படை இயக்குநரை நேரில் சென்று நிலவரம் குறித்து ஆய்வு செய்யுமாறும் அமித்ஷா உத்தரவிட்டார். அசாமில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த அமித்ஷா, கவுகாத்தியில் செய்தியாளர்களை சந்தித்த போது, இரு தரப்பிலும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் தேடுதல் பணி நடந்து வருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், அசாம் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, அமித்ஷா டெல்லி திரும்பியுள்ளார். 

மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களின் தியாகம் வீண் போகாது என சத்தீஷ்கார் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவுகாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுக்மாவில் 4 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்ற சண்டையில் மாவோயிஸ்ட்களுக்கும் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். 

சத்தீஸ்கரில்  நடந்த நக்சல் தாக்குதலில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். வீர மரணம் அடைந்த 22 வீரர்களின் தியாகத்திற்கு நாடு தலை வணங்குகிறது என்றும், அவர்களுக்காக நாடு  நன்றிக்கடன் பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
காணாமல்போன  வீரர்கள் திரும்பி வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், காயமடைந்தோர் விரைவில் மீண்டு வரட்டும் என சோனியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை எதிர்க்க அனைவரும் ஒன்றிணைவோம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்