மகள் வாழ்வு குறித்த கவலையில் தந்தை தற்கொலை - தந்தை இறந்ததை தாங்க முடியாத மகள்களும் மரணம்

ஆந்திராவில் மரணத்திலும் பாசப்போராட்டம் நடத்திய ஒரு குடும்பத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

Update: 2020-08-08 14:37 GMT
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரை சேர்ந்தவர் பாபுரெட்டி. இவர் எலக்ட்ரிகல் காண்ட்ராக்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஸ்வேதா, சாய் என 2 மகள்கள். பெண் பிள்ளைகள் 2 பேர் மீதும் அளவு கடந்த பிரியம் வைத்திருந்தார் பாபு ரெட்டி. இதில் மூத்த மகள் ஸ்வேதாவுக்கு சுரேஷ் குமார் என்பவரை திருமணம் ஆனது. தன் பாச மகளின் எதிர்காலத்திற்காக ஏராளமான சீர் வரிசை பொருட்களையும் வழங்கினார் பாபுரெட்டி. 

ஆனால் மணமாகிச் சென்ற தன் மகளை மருமகன் கொடுமைப்படுத்தி வருவதை அறிந்த பாபுரெட்டி துடித்துப் போனார். தன் மகள் அனுபவிக்கும் கொடுமைகளால் மன உளைச்சலுக்கு ஆளானார் பாசத் தந்தை. கடைசியில் தன் உயிரை விடுவதென தீர்மானித்த அவர், தன் மரணத்திற்கு காரணம் மருமகன் சுரேஷ்குமார் தான் என கூறி வீடியோ ஒன்றை பதிவு செய்துவிட்டு தன் வீட்டுக்கு அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தங்கள் தந்தையின் மரண செய்தியை கேட்டு மகள்கள் இருவரும் துடித்துப் போயினர். தங்கள் மீது தந்தை வைத்திருந்த பாசத்தால் தான் இந்த நிலை என்பதை அறிந்த 2 பேரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். 3 பேரின் சடலங்களையும் மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கெல்லாம் காரணமான மருமகன் சுரேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பாசப் போராட்டம் நடத்திய மகள்களும், தந்தையும் ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்