மர்மம் நிறைந்த இலங்கை தாதா உயிரிழந்த வழக்கு - சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்றி உத்தரவு

இலங்கையை சேர்ந்த போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் அங்கொட லொக்கா உயிரிழந்த விவகாரத்தில் இலங்கையைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் கோவையில் கைது செய்யப்பட்டனர். மர்மம் நிறைந்த அங்கோடா லோக்கா மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அவரது பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

Update: 2020-08-04 06:25 GMT
தாதாக்களின் வாழ்க்கை என்றாலே மர்மம் நிறைந்ததாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் அங்கொட லொக்கா மரண விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல நாட்டு காவல்துறை அவரை தேடி வந்த நிலையில் அங்கொட லொக்கா  கோவைக்கு வந்து தங்கியது எப்படி...?
இலங்கையைச் சேர்ந்த 36 வயதான அங்கொட லொக்கா,பிரபல ரவுடியாகவும், போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நிழல் உலக தாதாகவும் வலம் வந்தார். இலங்கை மட்டுமல்லாது பல நாடுகள், அவரை தேடி வந்த நிலையில், அங்கொட லொக்கா ஏற்கனவே கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கோவையில் தங்கியிருந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். 
ஜூலை மாதம் 4 ஆம் தேதி கோவை பீளமேடு காவல்நிலையத்தில், சிவகாமி சுந்தரி என்பர், தனது உறவினர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும், அவரின் இறப்பு குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை வைத்துள்ளார். உயிரிழந்த நபரின் பெயர் பிரதிப்சிங் என்றும், அவர் கோவையில் வசித்துவருவதாகவும் சிவகாமி குறிப்பிட்டுருந்தார். இதற்கு ஆதாரமாக பிரதிப்சிங்கின் ஆதார் அட்டையையும் காவல்நிலையத்தில் சமர்பித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து,  உயிரிழந்த நபரின் உடலை சிவகாமி தனது சொந்த ஊரான மதுரைக்கு எடுத்துச்சென்று, தகனம் செய்துள்ளார்.
உயிரிழந்த நபரின் ஆதார் அட்டையைக் கோவை மாநகரக் காவல்துறையினர் ஆய்வு செய்ததில், அதில் உள்ள பெயர் போலியானது என தெரியவந்தது.  அதோடு, உயிரிழந்தவர் இலங்கையில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டுவரும் குற்றவாளி அங்கட லக்கா என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
கோவையில் அங்கட லக்காவோடு கொழும்புவைச் சேர்ந்த 27 வயது பெண் ஆமானி தான்ஜி என்பவரும் வசித்து வந்தது கண்டறியப்பட்டது.
இவ்வழக்கின் புலன்விசாரனையில், மதுரையைச் சேர்ந்த சுந்தரியும் அவரது நண்பரான திருப்பூரில் வசித்துவரும் ஈரோட்டைச் சேர்ந்த தியானேஸ்வரன்  என்பவரும் உதவியது தெரியவந்தது. அங்கொட லொக்கா மற்றும் அமானி தான்ஜி ஆகியோரின் பெயர் மற்றும் நாட்டின் குடியுரிமையை மாற்றி  போலி  ஆதார் அட்டை தயாரிக்க உதவி செய்து வந்துள்ளதும் உறுதியானது.
இதைத்தொடர்ந்து, சிவகாமி சுந்தரி, அமானி தான்ஜி, தியானேஷ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அமானி தான்ஜிக்கு இரண்டு மாத கரு கலைந்ததால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு,
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறைகைதிகள் வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவகாமசுந்தரியும், தியானேஷ்வரனும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, சிவகாமசுந்தரியும், தியானேஷ்வரனையும் காவலில் எடுத்து, அங்கொடா லொக்கா மற்றும் அமானி தான்ஜியுடன் மதுரையைச் சேர்ந்த சிவகாமி சுந்தரிக்கு பழக்கம் ஏற்பட்டது எப்படி ?அங்கொட லொக்காவின் உடலை மதுரைக்கு எடுத்துச் சென்று எரிக்க என்ன காரணம்? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கோவை காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பரபரப்பான இந்த சூழ்நிலையில் அங்கொட லொக்காவின் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. 
அங்கொடா லொக்கா உயிரிழப்பு தொடர்பாக ஒரு வழக்கும்,  போலி ஆவணங்களை பயன்படுத்தி ஆதார் கார்டு வாங்கியது, குடியுரிமை ஆவணம் மற்றும் போலி ஆவணங்கள் கொண்டு உடல் எரிக்கப்பட்டது தொடர்பாக ஒரு வழக்கு என இரண்டு வழக்குகள் பதிவு செய்து, விசாரணையை தொடங்கி உள்ளது சிபிசிஐடி. கோவையில், ஐ.ஜி சங்கர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் வழக்கை அடுத்தக்கட்டத்தில் கொண்டு செல்வது குறித்தும், சிறைக்காவலில் உள்ள அமானி தான்ஜி, சிவகாமி சுந்தரி மற்றும் தியானேஸ்வரன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்