"யெஸ் வங்கிக்கு புதிய நிர்வாக குழு நியமிக்கப்படும்" - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு
இந்திய வங்கித்துறை வலுவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.;
யெஸ் வங்கி விவகாரம் தொடர்பாக, மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், யெஸ் வங்கி படிப்படியாக சிக்கலில் இருந்து மீட்கப்படும் என தெரிவித்தார். யெஸ்வங்கியில் முதலீட்டாளர்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது என்றும், வரும் 18 ஆம் தேதி முதல் அந்த வங்கியின் அனைத்து செயல்பாடுகளும் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். வரும் 26 ஆம் தேதிக்குள் யெஸ் வங்கிக்கு புதிய நிர்வாக குழு நியமிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். கொரோனா தாக்கத்தினால் உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்க நிலை, இந்தியாவையும் பாதித்துள்ளது என்றும், அதேநேரத்தில் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவாக உள்ளதாகவும் சக்தி காந்த தாஸ் கூறினார்.