நாட்டின் 71வது குடியரசு தின கொண்டாட்டம் - டெல்லியில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார் குடியரசுத் தலைவர்
நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ பாதையில் தேசியக்கொடி ஏற்றி வைத்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.;
நாட்டின் 71-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ராஜபாதைக்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படை தளபதிகள் வரவேற்றனர். குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் போல்சனரோ பங்கேற்றார்.
பின்னர் 21 குண்டுகள் முழங்க, தேசிய கொடியை ஏற்றி வைத்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முப்படைகளின் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
முதலாவதாக விமானப்படை, கப்பல் படை, தரைப்படை வீரர்கள், பயன்படுத்தும் அதிநவீன பீரங்கிகள், ஏவுகணைகள், டாங்கிகளின் அணிவகுப்பு, ராஜ பாதையில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களை வெகுவாக கவர்ந்தது.
இதைத்தொடர்ந்து நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் அலங்கார வாகனங்கள் அணிவகுத்தன. இதில் தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில், அய்யனார் சிலையுடன் கூடிய அலங்கார ஊர்தி அணிவகுத்தது.
மத்திய அரசின் சாதனைகளை பறைசாற்றும் அலங்கார வாகனங்களும் அணிவகுத்தன.
ராணுவ வீரர்களின் கம்பீர அணிவகுப்பு மற்றும் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
முன்னதாக, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி, பணியின்போது உயிர்நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி நாராவனே, கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங், விமான படை தலைமை தளபதி பதோரியா ஆகியோர் பங்கேற்றனர்.