கச்சா எண்ணெய் விலை உயர்வு - அமெரிக்க அதிரடி.!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை குறைக்கும் நகர்வாக, அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று இந்தியா கையிருப்பிலிருந்து 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
x
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை குறைக்கும் நகர்வாக, அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று இந்தியா கையிருப்பிலிருந்து 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.


கடந்த அக்டோபர் மாதம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 80 புள்ளி 40 டாலர்களாக உயர்ந்தது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 6 ஆயிரத்து 435-க்கு விற்பனையானது. 

இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு ஒபெக் மற்றும் அதன் நட்பு நாடுகளை அமெரிக்கா கேட்டுக்கொண்டது. 

ஆனால் அமெரிக்காவின் கோரிக்கையை ஒபெக் நாடுகள் நிராகரித்துவிட்டன.

இந்நிலையில் விலையை குறைக்கும் நடவடிக்கையாக இந்தியா, சீனா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட கச்சா எண்ணெய் நுகர்வு நாடுகளை நாடிய அமெரிக்கா, தங்கள் சேமிப்பில் இருக்கும் கச்சா எண்ணெய்யை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா தன்னுடைய சேமிப்பில் இருந்து 5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை பயன்பாட்டுக்கு விடுவிப்பதாக அறிவித்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரையில் ஆந்திரா, கர்நாடகாவில் 3 இடங்களில் 3 கோடியே 80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு செய்துள்ளது.

சேமிப்பிலிருந்து எண்ணெய்யை விடுவிக்கும் பணி 7 முதல் 10 நாட்களுக்குள் தொடங்கும் என மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதேபோன்று சீனாவும், தென் கொரியாவும் தங்கள் கையிருப்பு கச்சா எண்ணெய்யை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்து உள்ளன. ஜப்பானும் இந்த முடிவில்தான் இருக்கிறது. இவ்வரிசையில் பிற கச்சா எண்ணெய் நுகர்வு நாடுகளும் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சமீப காலமாக மேற்கத்திய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் கையிருப்பு எண்ணெய்யை பயன்படுத்தும் போது, பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Next Story

மேலும் செய்திகள்