தாய்லாந்தில் கரைபுரண்டோடும் வெள்ளம் - அச்சத்தில் உறைந்துள்ள மக்கள்

தாய்லாந்து நாட்டில் கரை புரண்டோடும் வெள்ளத்தால் 7 பேர் பலியாகியுள்ள நிலையில், பாங்காக் மற்றும் மத்திய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்...
தாய்லாந்தில் கரைபுரண்டோடும் வெள்ளம் - அச்சத்தில் உறைந்துள்ள மக்கள்
x
இடுப்பளவு தண்ணீரில் இழந்த தங்கள் உடைமைகளைத் தேடிக் கொண்டும்...இருப்பது போதும், உயிர் பிழைத்ததே லாபம் என்று நினைக்கும் அளவுக்கு தாய்லாந்து மக்களை வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெருவெள்ள பாதிப்பு தன் கோர முகத்தைக் காட்டுவதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 2011ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை தாய்லாந்து மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்...இந்த அரை நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ள பாதிப்பை எதிர்கொண்ட நிலையில், அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். எப்போதும் இல்லாத அளவுக்கு சமீப காலமாக கால நிலை மாற்றத்தால் உலகின் எல்லா பகுதிகளிலும் இயற்கை சீற்றங்கள் தலை தூக்க ஆரமபித்துள்ளன.

சரியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 7 பேர் பலியாகியுள்ள நிலையில், காணாமல் போன இருவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன...படகுகளின் மூலம் மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியேறி வருகின்றனர். சாவோ ப்ரயா பகுதியில் கனமழை எதிரொலியாக அணைகள் நிரம்பியதால், லோப்புரி, சரபுரி, அயுதயா, பதும்தனி, உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. தாய்லாந்தின் 30க்கும் மேற்பட்ட மாகாணங்களில் கிட்டத்தட்ட 2 லட்சம் குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

மேலும் வெள்ள நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்த வெள்ளத்தால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்ட நிலையில், மக்களுக்கு தேவையான பொருட்கள் பாரசூட் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்