"பஞ்சஷீர் மாகாணத்தை கைப்பற்றிவிட்டோம்" - தலிபான் செய்தித் தொடர்பாளர் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானின் பஞ்சஷீர் மாகாணத்தையும் கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
பஞ்சஷீர் மாகாணத்தை கைப்பற்றிவிட்டோம் - தலிபான் செய்தித் தொடர்பாளர் எச்சரிக்கை
x
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறிய நிலையில், 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றினர். ஆனால், இந்துகுஷ் மலைத்தொடரில் அமைந்திருக்கும் பஞ்ச்ஷீர் மாகாணத்தை மட்டும் அவர்களால் கைப்பற்ற முடியவில்லை.
 
சுமார் 2 லட்சம் மக்கள் வாழும் பஞ்ச்ஷீர் மாகாணம் நீண்ட காலமாக தலிபான்களுக்கு எதிரான ஆயுத குழுவின் வசமிருந்து வந்தது. 

1980-களில் சோவியத் படைகளுக்கு எதிராகவும் 1990-களில் தலிபான்களுக்கு எதிராகவும் சண்டையிட்ட பஞ்ச்ஷீர் மாகாண போராளிகள் ஒருபோதும் சரணடையவில்லை.

அமெரிக்க படைகள் வெளியேறியதுமே பஞ்சஷீர் மாகாணத்தை நோக்கி படையெடுத்த தலிபான் படைகள் மாகாணத்தை முற்றுகையிட்டது. 

மாகாணத்திற்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் செல்லும் ஒற்றை வாயில் பகுதியையும் தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்த தலிபான் படைகள், ஆக்ரோஷ தாக்குதலை தொடுத்தன. இதற்கு பஞ்சஷீர் போராளிகள் கொடுத்த பதிலடியில் 300க்கும் அதிகமான தலிபான்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. 

இருதரப்புக்கும் இடையே சண்டை தீவிரமாக நடைபெற்ற நிலையில், மாகாணத்தை தாங்கள் கைப்பற்றிவிட்டோம் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

மாகாண ஆளுநர் மாளிகையில் தலிபான் கொடியை ஏற்றும் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய தலிபான் பயங்கரவாத அமைப்பின்  செய்தி தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகிதீன், தலிபான்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்க இதுபோன்ற பதிலடியே கிடைக்கும் என எச்சரித்துள்ளார்.

பஞ்சஷீரிலிருந்த துணை அதிபர் அமருல்லா சாலே மற்றும் பஞ்ச்ஷீர் போராளிகள் குழுவின் பிற தலைவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிவிட்டனர் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால், இதனை மறுத்திருக்கும் பஞ்சஷீர் போராளிகள் குழு, தங்களுடைய போராட்டம் தொடர்கிறது என தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்