ஜார்ஜ் பிளாய்டு - மரணம் முதல் நீதி வரை...

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
ஜார்ஜ் பிளாய்டு - மரணம் முதல் நீதி வரை...
x
ஜார்ஜ் பிளாய்டின் மரணம் முதல் தீர்ப்பு வரை அரங்கேறிய சம்பவங்களை விவரிக்கிறது இந்த தொகுப்பு......
அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் உள்ள மின்னியாபோலிஸ் நகரில் வசித்து வந்த கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்டு...இவர், கடந்த ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி அங்குள்ள கடை ஒன்றில் பொருட்களை வாங்கிச் சென்ற நிலையில், ஜார்ஜ் பிளாய்டு கள்ள நோட்டு அளித்ததாக கடை ஊழியர் சந்தேகித்தார்.பின்னர், கடை உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீஸ் அதிகாரிகள் காரில் இருந்த ஜார்ஜ் பிளாய்டை எதுவும் விசாரிக்காமல், தரதரவென்று வெளியே இழுத்து, வீதியில் வீசி விலங்கு மாட்டினர்.அப்போது டெரீக் சாயுவின் என்ற வெள்ளை இன போலீஸ் அதிகாரி, கைகளில் விலங்கு மாட்டப்பட்டு இருந்த ஜார்ஜ் பிளாய்டின் கழுத்தில் தனது முட்டியைக் கொண்டு அழுத்தி அராஜகத்தை அரங்கேற்றினார்.கைகளும் கட்டப்பட்டு, கழுத்தும் நெரிக்கப்பட்டதால் மூச்சுவிட முடியாமல் திணறிய ஜார்ஜ் பிளாய்ட், தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று கூறியவாறே மூர்ச்சையானார்.இந்த சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்த சிறுமி ஒருவர், வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில், போலீசாரின் அராஜகத்தைப் பார்த்து அமெரிக்க மக்கள் கொந்தளித்தனர்.
கருப்பின மக்கள் மீது போலீசார் எப்போதும் வெறுப்பை உமிழ்வதாக மக்கள் குற்றம்சாட்டிய நிலையில், ஜார்ஜ் பிளாய்டுக்கு நீதி கேட்டு அமெரிக்காவெங்கும் போராட்டங்கள் வெடித்தன.இன, மத பாகுபாடின்றி நடந்த போராட்டத்தில் பங்கேற்ற வெள்ளை இன மக்கள் பலர், ஜார்ஜ் பிளாய்டு மரணத்துக்கு மண்டியிட்டு மன்னிப்பும் கேட்டனர். 'பிளாக் லைவ்ஸ் மேட்டர்' black lives matter' என்ற பெயரில் நடந்த இந்த போராட்டங்களால், வல்லரசு நாடான அமெரிக்காவே ஆட்டம் கண்டது. சர்வதேச அளவிலும் இந்த போராட்டங்கள் கவனம் பெற்றன. தொடர் போராட்டங்களால், சம்பவத்தில் ஈடுபட்ட 4 போலீஸ் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மின்னசொட்டா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதனிடையே, ஜார்ஜ் பிளாய்டு மரணம் பற்றி பேசிய அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப், கருப்பினத்தவரைக் காட்டிலும், வெள்ளையின மக்கள் மீதே அதிக வன்முறைகள் நடப்பதாக கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்த நிலையில், அதிபர் தேர்தலில், மறைந்த ஜார்ஜ் பிளாய்டு வசித்த மின்னசொட்டா மாகாணத்தில் டிரம்ப் கட்சி தோல்வி அடைந்தது.இந்நிலையில், ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கை விசாரித்த மின்னசொட்டா நீதிமன்றம், பிளாய்டை கழுத்தில் நெரித்த முன்னாள் போலீஸ் அதிகாரி, டெரீக் சாயுவினை குற்றவாளியாக அறிவித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.பன்னிரண்டரை ஆண்டுகள் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தண்டனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.சட்டத்திற்கு மேலாக யாரும் கிடையாது என்று தீர்ப்பு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க மக்கள் தீர்ப்பால் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.தாங்கள் தற்போதுதான் மீண்டும் சுவாசிக்கத் தொடங்கி உள்ளதாக மறைந்த ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் கூறி உள்ள நிலையில், ஒரு வருடத்திற்குள் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது, சர்வதேச அளவில் முன்னுதாரணமாக மாறி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்