செவ்வாய் கிரகத்தில் பறந்த ஹெலிகாப்டர், மனித குலத்தின் மகத்தான சாதனை

செவ்வாய் கிரகத்தில் தாங்கள் அனுப்பிய இன்ஜெனியுட்டி ஹெலிகாப்டர் வெற்றிகரமாக பறந்துள்ளதாக நாசா கூறியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் பறந்த ஹெலிகாப்டர், மனித குலத்தின் மகத்தான சாதனை
x
1903-ஆம் ஆண்டு பூமிப்பந்தில் முதல் முறையாக விமானத்தை பறக்கவைத்து வரலாறு படைத்தான் மனிதன். அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில், ரைட் சகோதரர்கள், பூமியின் முதல் விமானத்தை பறக்க வைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர். தற்போது சரியாக 118 ஆண்டுகள் கழித்து பூமிக்கு வெளியே, வேற்று கிரகமான செவ்வாயில் ஹெலிகாப்டரை பறக்க வைத்து மற்றுமொரு மைல்கல்லை தொட்டுள்ளது மனித குலம்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய பெர்செவரன்ஸ் எனும் விண்கலத்தை கடந்த ஆண்டு அனுப்பியது. இந்த விண்கலம், கடந்த பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக செவ்வாயை சென்றடைந்து அதன் செம்மண்ணை முத்தமிட்டது. பெர்செவரன்ஸ் விண்கலத்தடன், இன்ஜெனியுட்டி என்ற டிரோன் ரக ஹெலிகாப்டரையும், அடிப்பகுதியில் இணைத்து அனுப்பியிருந்தது நாசா. சுமார் 2 கிலோ எடையில், அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தன்னிச்சையாக இயங்கும் வகையில் இன்ஜெனியுட்டி ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த இன்ஜெனியுட்டி ஹெலிகாப்டரை, பெர்செவரன்ஸ் விண்கலத்தில் இருந்து  பிரித்து, செவ்வாயின் வெளிப்பரப்பில் பறக்க வைப்பதே நாசாவின் திட்டம். திட்டப்படி இன்ஜெனியுட்டி ஹெலிகாப்டர் விண்கலத்தில் இருந்து பிரிந்த நிலையில், அதை பறக்க வைப்பதற்கான ஆயத்த வேலைகளில் நாசா களமிறங்கியது. 

ஆனால், அங்குதான் பல சவால்கள் காத்துக்கிடந்தன. புதிர்கள் நிறைந்த செவ்வாய் கிரகம், புழுதிப்புயலுக்கு பெயர் போனது. எங்கிருந்து எப்போது புயலடிக்கும் என்பதை எவராலும் கூற முடியாது. இதேபோல், இன்ஜெனியுட்டி இறங்கிய இடத்தில், இரவு நேரம் மைனஸ் 90 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உறைநிலை நீடிக்கும். கடுங்குளிரால் ஹெலிகாப்டர் பாகங்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகளும் இருந்தன.மேலும் மெல்லிய வளிமண்டலத்தை செவ்வாய் கிரகம் கொண்டிருப்பதால், ஹெலிகாப்டரை பறக்க வைப்பது நாசா விஞ்ஞானிகளுக்கு சற்றே சவாலான காரியமாகவே பார்க்கப்பட்டது. ஆனால், இதுபோன்ற அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து, தன் இறக்கைகளை பம்பரமாய் சுழற்றி, செவ்வாயின் செவ்வானத்தில் சிறகடித்துள்ளது இன்ஜெனியுட்டி. இதன்மூலம், வேற்று கிரகத்தில் பறந்த முதல் ஹெலிகாப்டர்  என்ற சாதனை படைக்கப்பட்டுள்ள நிலையில், நாசா விஞ்ஞானிகளுக்கு மற்றுமொரு மணிமகுடமாக இந்த நிகழ்வு மாறி உள்ளது. சுமார் 3 மீட்டர் உயரத்தில், 30 வினாடிகள் பறந்த இன்ஜெனியுட்டி, தனது நிழலை தானே படமெடுத்து பூமிக்கு அனுப்பி உள்ளது. இன்ஜெனியுட்டி பறக்கும் காட்சிகள் பெர்செவரன்ஸ் ரோவர் மூலம் பூமியை வந்தடைந்து உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்