உலக அரங்கை அதிர வைத்த 16 வயது சிறுமி

16 வயது சிறுமியின் பேச்சு உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பை சிறுமி முறைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உலக அரங்கை அதிர வைத்த 16 வயது சிறுமி
x
க்ரெட்டா துன்பெர்க்... இந்த 16 வயது குட்டி பெண்ணின் குரல்தான் ஐநா சபையில் "HOW DARE YOU!" அதாவது "எவ்வளவு தைரியம் உங்களுக்கு!" என உலகத் தலைவர்களை நோக்கி ஓங்கி ஒலித்தது. காலநிலை மாற்றத்திற்கான போராளியாக க்ரெட்டா துன்பெர்க் ஐநா சபையில் பேசிய பேச்சுதான் இன்று உலகெங்கும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. 
இந்த சின்ன பெண்ணுக்குள் ஏன் இவ்வளவு கோபம்? 
க்ரெட்டா துன்பெர்க் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண் தான். சிறு வயதிலேயே "அஸ்பெர்ஜர்ஸ் ஸின்ட்ரம்"(Asperger's syndrome" என்ற குறைபாடு இவருக்கு இருப்பது தெரியவந்தது. தன்னைச் சுற்றி சிறு குறை இருந்தாலும் அது மிகப்பெரிய தாக்கத்தை இந்த குழந்தைக்குள் ஏற்படுத்தி இருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே சுற்றுப்புற சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து தனது எட்டு வயதில் தந்தை கூற கேட்டிருக்கிறாள். இதற்கு ஏன் உலக தலைவர்கள் எதுவும் முயற்சி எடுக்கவில்லை என குறைபட்ட கிரேட்டா தானே களத்தில் இறங்க முடிவு செய்தார்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஸ்வீடன் நாட்டு நாடாளுமன்ற வாசலில் "காலநிலைக்கான பள்ளி வேலைநிறுத்தம்" என்ற பதாகையுடன் நெருக்க பின்னிய இரட்டை ஜடையுடன் தர்ணா செய்து உட்கார்ந்திருந்த குட்டி பெண்ணை பலரும் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் போராட்ட வெறி குறையாது சுழன்று அடித்த கிரேட்டா புயல், நியூயார்க் நகரில் தனது பலத்தை காட்டி உலக கவனத்தை ஈர்த்திருக்கிறது. கிட்டத்தட்ட 60,000 மக்கள் அவரைப் பின் தொடர்ந்து காலநிலை காண பேரணி நடத்தி நியூயோர்க் நகர வீதிகளை அதிர வைத்தனர். 

அதனைத் தொடர்ந்து கிரேட்டா ஐநாவில் உரையாற்றியது எல்லாம் அதிரடி சரவெடி தான். உலகத் தலைவர்களை நோக்கி "ஒரு மாபெரும் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் உங்கள் கவனம் எல்லாம் பொருளாதாரம் குறித்தும், எப்படி அதிக பணம் சம்பாதிப்பது என்பது குறித்தும் தான் இருக்கிறது. எங்கள் தலைமுறையினர் உங்களை மன்னிக்க மாட்டோம்" என பேச அங்கிருந்த வாய்கள் அனைத்தும் அடைத்து போயின. அந்த எழுச்சி மிகுந்த உரையை தான் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தற்போது பகிர்ந்து வருகிறார்கள். சிறிது நேரம் கழித்து, அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் அங்கு வர, அவரை பார்த்து கிரேட்டா முறைத்த முறைப்பு... அப்பப்பா... கண்களாலேயே எரிக்காத குறைதான்.

எல்லாவற்றுக்கும் சேர்த்து தான் உலகமே இன்று கிரேட்டாவை கொண்டாடி வருகிறது. " உங்களின் அடுத்த தலைமுறையினருக்கு என்ன மாதிரியான உலகை பரிசளித்துவிட்டு செல்ல இருக்கிறீர்கள்?" என கிரேட்டா கேட்ட கேள்வி உலக தலைவர்களுக்கு மட்டுமல்ல நம் ஒவ்வொருவருக்கும் தான்.

Next Story

மேலும் செய்திகள்