"ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு" - உச்சநீதிமன்றத்தில் இருதரப்பு வாதம் என்ன?

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் நடந்த இருதரப்பு வாதம் குறித்த ஒரு தொகுப்பை காணலாம்.
x
ஆவினில் வேலை வாங்கி தருவதாக, 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதற்கிடையே முன்ஜாமீன் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.


தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்ற போது, ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, கொரோனா காலத்தில் தேவையில்லாமல் ஒருவரை சிறைக்கு அனுப்பக்கூடாது என வாதிட்டார். 

7 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்படும் வழக்குகளில் தேவையில்லாமல் ஒருவரை சிறைக்கு அனுப்பக்கூடாது என நீதிமன்றங்களை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது எனக் கூறிய அவர், ராஜேந்திர பாலாஜி எந்தவித பெரும் குற்றத்தையும் செய்யவில்லை என வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, அரசு வேலை வாங்கி தருவதாக பணம் வசூலிக்கப்பட்ட விவகாரத்தில் 32 பேர் புகார் அளித்துள்ளனர் என்றார்.

முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதும் ராஜேந்திர பாலாஜியை கைது செய்வதுதான் சரியாக இருக்கும் என காவல்துறை நினைத்தது என்றும் அரசியல் காரணங்களுக்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என கூறுவது அடிப்படையற்றது எனவும் வாதிட்ட முகுல் ரோத்தகி.

வழக்கறிஞர் வீட்டில் ராஜேந்திர பாலாஜி இருக்கிறாரா என்பதை அறிந்துக்கொள்ளவே அங்கு காவல்துறை சென்றது எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள், ராஜேந்திர பாலாஜிக்கு ஒரு மாதம் ஜாமீன் அளிக்கவும், ஒரு மாதத்திற்கு பின்னர் விசாரணையை முடிக்கவும் யோசனை தெரிவித்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பில், இந்த வழக்கு தொடர்பான முதல்கட்ட விசாரணை தொடர்பான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ததும் முடிவு எடுக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதையேற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை 12 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.   

Next Story

மேலும் செய்திகள்