விவசாயம் செழிக்க ஆண்டு தோறும் நடக்கும் சாணி அடி திருவிழா

விவசாயம் செழிக்கவும்... கால்நடைகள் நோய் நொடியின்றி இருக்கவும்... மலைக் கிராமத்தில் நடக்கும் சாணி அடிக்கும் வினோத திருவிழா பற்றி இந்த செய்தித் தொகுதிப்பில் பார்க்கலாம்...
விவசாயம் செழிக்க ஆண்டு தோறும் நடக்கும் சாணி அடி திருவிழா
x
தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களின் எல்லையில் உள்ளது கும்டாபுரம் கிராமம். ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் இக்கிராமத்தில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும்தான் பிரதான தொழிலாக இருக்கிறது..  

நாட்டு மாடுகள் அங்கும் இங்குமாக நடைபோடும் இக்கிராமத்தில் 300 ஆண்டு பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை அடுத்து வரும் 3-வது நாள் சாணியடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
 
இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் சாணியடி திருவிழா நடைபெற்றது.  இதற்காக கிராமத்தில் உள்ள மாடுகளின் சாணம் சேகரிக்கப்பட்டு கோவிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது.

கோவிலில் பூஜை செய்யப்பட்ட பின், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொட்டி வைக்கப்பட்ட சாணத்தை உருண்டையாக பிடித்து ஒருவர் மீது ஒருவர் வீசி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். பாரம்பரியமிக்க இந்த வினோத நிகழ்ச்சியை பெண் பக்தர்கள் ஆர்வத்துடன் பார்த்து கைதட்டி உற்சாகப்படுத்தினர். 

அதன்பிறகு பக்தர்கள் அனைவரும் குளத்தில் நீராடி விட்டு பீரேஸ்வரரை வழிபட்டனர். பக்தர்கள் வீசிய சாணத்தை விவசாயிகள் ஆர்வத்துடன் எடுத்து சென்று தங்கள் விளைநிலங்களில் இட்டனர். 

இந்த வினோதமான திருவிழா கொண்டாட்டத்தின் பின்னணி பற்றி கூறும் கிராம மக்கள், முன்னொரு காலத்தில் சிவ பக்தர் ஒருவரின் பொருட்கள் குப்பை மேட்டில் வீசப்பட்டு சாணங்கள் கொட்டப்பட்டதாகவும், விவசாயத்திற்கு அங்கிருந்து சாணம் அள்ளிய போது மண்வெட்டி பட்டு லிங்கம் ஒன்றில் இருந்து ரத்தம் வழிந்ததாகவும் அந்த லிங்கத்தை எடுத்து பூஜித்து வருவதாகவும் கூறுகின்றனர்.  

பெரியவர் ஒருவருக்கு சாமி வந்து, அவர் கூறிய அருள்வாக்கின்படி, தீபாவளியை அடுத்து 3 நாட்கள் கழித்து திருவிழாவை நடத்துவதாகவும் இதில் பயன்படுத்தப்படும் சாணியை விவசாய நிலத்தில் தூவினால் பயிர்கள் நன்றாக வளரும்... கால்நடைகள் நோயின்றி வாழும் என்பது நீண்டகால நம்பிக்கை எனவும் கூறுகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்