செவிலியர் உள்ளிட்ட 24 பேருக்கு கொரோனா"

கும்பகோணம் அரசு மருத்துவமனை செவிலியர் உள்ளிட்ட 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செவிலியர் உள்ளிட்ட  24 பேருக்கு கொரோனா
x
கும்பகோணம் அரசு மருத்துவமனை செவிலியர் உள்ளிட்ட 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காசிராமன் தெருவில் வசிக்கும் மற்றொருவருக்கும் தொற்று ஏற்பட்டதால், அவர்கள், தஞ்சாவூரில் உள்ள சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் உள்ளிட்ட 194-பேருக்கும், வெளி நாட்டில் இருந்த வந்த ஒருவருக்கும் என மாவட்டத்தில் நேற்று மட்டும் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1949-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 23- பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


ஒசூர் அருகே சிறப்பு இரத்ததான முகாம் - ஆர்வத்துடன் இரத்தம் வழங்கிய இளைஞர்கள்


ஒசூர் அருகேயுள்ள தேன்கனிகோட்டையில் நடைபெற்ற சிறப்பு இரத்ததான முகாமில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.ஆட்சியர் பிரபாகரனின் உத்தரவின்பேரில், 
நடைபெற்ற சிறப்பு இரத்ததான முகாமில் ஜெய்பீம் பேரவையை சேர்ந்த 100-க்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் இரத்தம் வழங்கினர். 



"மூன்று பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது"


திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 
சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய ஆரணி அருகே உள்ள 12 புதூர் கிராமத்தைச் சேர்ந்த  பூபாலன், கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில், பள்ளிகொண்டாபட்டு கிராமத்தைச் சேர்ந்த  தங்கவேல் மற்றும் கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த செல்வி  என்பவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 


நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் 


கரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார், நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது. கிருஷ்ணராயபுரத்தில் இருந்து கரூர் நோக்கி சென்ற கார், மாயனூர் காவல் நிலையத்தை தாண்டி சென்று கொண்டிருக்கும் போது தீ பற்றி எந்து முற்றிலும் நாசமானது. விரைந்து வந்த தீயணைப்புத்துறை தீயை அணைத்தனர்

இளம்பெண் தூக்கிட்ட நிலையில் மர்ம மரணம் மரணத்திற்கு நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம் 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இளம்பெண் தூக்கிட்டு உயிரிழந்தார். பெரிய  சோழிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த  தனலட்சுமிக்கும், புது கும்மிடிப்பூண்டியை சேர்ந்த அருள்மொழி என்பவருக்கும், கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தனலெட்சுமியிடம் வரதட்சனைக்கேட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் பொன்னேரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நீதி கேட்டு பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான மூன்று சதிக்கற்கள் கண்டுபிடிப்பு 


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே  வே.சத்திரப்பட்டியில் 400 ஆண்டுகள் பழமையான மூன்று சதிக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை தலைவரும், தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் முனீஸ்வரன், வே.சத்திரப்பட்டி கண்மாய் பகுதியில் கள ஆய்வு செய்தார்.அப்போது மூன்று வகையான கலைநுட்பத்துடன் கூடிய சதிக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


காவிரி ஆற்றில் வாய்க்கால்கள் மூலம் சாயக் கழிவுகள் கலக்கப்படுகிறதா? - மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் சோதனை


காவிரி ஆற்றில் வாய்க்கால்கள் மூலம் சாயக் கழிவுகள் கலக்கப்படுகிறதா என்பது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் காவிரி ஆற்றோரப் பகுதிகளில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தேசிய பசுமை தீர்ப்பாய ஆணையம் அறிவுரையின்படி ஆற்றோர பகுதிகளிலுள்ள வாய்க்கால்களில் சாயக்கழிவுகள் அல்லது சாக்கடை கழிவுகள் ஆற்றில் கலக்கப்படுகிறதா? என ஆய்வு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மாநகராட்சி பகுதியில் 125 பேருக்கு கொரோனா


திருச்சி மாநகராட்சி பகுதியில் மேலும் 125 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி மைய அலுவலக பொதுப் பிரிவு ஊழியர்கள் 2 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநகரில் பெரிய கடைவீதிகளை மாநகராட்சி ஊழியர்கள் சீல் வைத்து அடைத்தனர்.


பாதிப்பில் இருந்து 883 பேர் குணமடைந்துள்ளனர் - வீடுகளில் 367 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்


விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 411 ஆக உயர்ந்துள்ளது.  இதில் 883 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று காரணமாக 509 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 208 பேரும், வீடுகளில் 367 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


அரசு மருத்துவர் உட்பட மேலும் 43 பேருக்கு தொற்று


குடியாத்தம் பகுதியில் அரசு மருத்துவர் உட்பட மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில், பாதிப்பு 250 ஐ கடந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்,  தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம் ஆய்வு மேற்கொண்டார். ஒரே நாளில் மருத்துவர் மற்றும் வருவாய் அதிகாரி உள்ளிட்டோர் பாதிப்புக்குள்ளாகி இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது



இரண்டு நாட்களில் 2 பேர் உயிரிழப்பு - கொரோனா பாதிப்பு 1,630 ஆக உயர்வு 


சேலம் மாவட்டத்தில் மேலும் 127 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 630 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 34 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதற்கிடையே, சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த 47 வயது பெண் மற்றும் 65 வயது பெண்  ஒருவரும் உயிரிழந்தனர். இதுவரை  மாவட்டத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதால் நோய் தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றுக்கு மேலும் 4 பேர் உயிரிழப்பு


கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அம்மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.


கொரோனா ஊரடங்கில் உயிரிழக்காத மதச்சார்பின்மை - உயிரிழந்த இந்து மூதாட்டியை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்


புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த இந்து மதத்தவரின் உடலை இஸ்லாமியர்கள் நல்லடக்கம் செய்துள்ளனர். காரைக்கால் பகுதியில் உயிரிழந்த 75 வயது மூதாட்டியின் உடலை இந்து முறைப்படியும், மத்திய அரசின் வழிகாட்டுதல் படியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் அடக்கம் செய்தனர்.


4 காவலர் உட்பட 7 பேருக்கு கொரோனா - காவல் நிலையம் மூடப்பட்டது


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், 4 காவலர் உட்பட 7 பேருக்கு கொரோனா உறுதியானதால் காவல் நிலையம் மூடப்பட்டது. 
இதுவரை ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார காவல் நிலையத்தில் மொத்தம் 20 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவால், ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் உள்ள நத்தம்பட்டி காவல் நிலையம், மம்சாபுரம் காவல் நிலையம், மல்லி காவல் நிலையம், நகர் போக்குவரத்து காவல் நிலையம் என 4 காவல் நிலையம் பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், காவலர் குடியிருப்பு நுழைவாயிலும் வெளி நபர் யாரும் வராமல் இருக்க பூட்டப்பட்டுள்ளது. இது காவலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


"தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க - வாட்ஸ் ஆப் குழு"


வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க வாட்ஸ் ஆப் குழு தொடக்கம் எனவும், கோவை மாநகராட்சி பகுதியில் 22 தனிமைப் படுத்தப்பட்ட மண்டலங்கள் உள்ளன எனவும் மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்தார். இது தொடர்பான திட்டத்தை தொடங்கி வைத்த ஆணையர், இந்த வாட்ஸ் ஆப் குழு மூலம், தனிமைப் படுத்தப்பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்க ஆலோசனை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார். மேலும், கொடிசியாவில் மருத்துவர்கள் பயன்படுத்திய பிபிகிட் நாய் கடித்து சென்றது சம்பவம் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், பயன்படுத்திய பி.பி.கிட்டை முறையாக அழிக்க வழிவகை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்