சாத்தான் குளம் - த‌ந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் : காவல்துறையினருக்கு நீதிபதி அறிவுரை

வணிகர்களான த‌ந்தை மகன் சிறையில் உயிரிழந்த விவகாரத்தை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை காவல்துறையினரை கண்டித்துள்ளது.
சாத்தான் குளம் - த‌ந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் : காவல்துறையினருக்கு நீதிபதி அறிவுரை
x
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த செல்வராணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தன் மகன் மற்றும் கணவரை போலீசார் அடித்து கொன்றுவிட்டதாக மனுத்தாக்கல் செய்தார். உயிருக்கு போராடியவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் சிறையில் அடைத்த‌தால் உயிரிழந்துள்ளதாக மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த மனுவை  நீதிபதி புகழேந்தி, பி.என்.பிரகாஷ் அடங்கிய அமர்வு, அவசர வழக்காக விசாரித்தது. அப்போது தென்மண்டல காவல்துறை ஐ.ஜி. சண்முக ராஜேஷ்வரன், தூத்துக்குடி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அருண் பால கோபால் ஆகியோர் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜர் ஆகினர். குற்றம்சாட்டப்பட்ட எஸ்.ஐ., பால கிருஷ்ண‌ன், ரகு கணேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதையும், இரு தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையும், ஐ.ஜி ஷண்முக ராஜேந்திரன் சுட்டிக்காட்டினார்.  அப்போது கோவில்பட்டி மேஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் வழக்கை முழுமையாக விசாரிக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், எவ்வித குறுக்கீடும் இருக்க கூடாது என்பதை காட்டமாக பதிவு செய்தனர். அனைத்து சாட்சியங்களையும் விசாரித்து முடித்த பின் 3 மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும், அதனை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலில் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொள்ள கூடாது என வலியுறுத்திய நீதிபதி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர். சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி காவல் துறை எஸ்.பி. ஜூன் 26 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க  டிஜிபி உரிய உத்தரவு  பிறப்பிக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்

Next Story

மேலும் செய்திகள்