வானில் வித்தை காட்டும் சூரிய கிரகணம்

சூரிய கிரகணம் வரும் 26ஆம் தேதி நிகழ உள்ள நிலையில் அதுதொடர்பான விரிவான செய்தி
வானில் வித்தை காட்டும் சூரிய கிரகணம்
x
சூரியனை பூமியும், பூமியை நிலவும் சுற்றி வருகிறது. அப்போது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் போது மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும். சூரியனின் ஒளித் தட்டை நிலவு மறைப்பதால் ஏற்படுவது தான் சூரிய கிரகணம். 

சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம். அதே நேரம் சூரியனின் மையப்பகுதியை மட்டும் மறைத்து விளிம்பில் வளையம்போல ஒளி தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணம் என்றழைக்கப்படுகிறது. 

இந்த வளைய சூரிய கிரகணம் தான் வரும் 26ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் சூரியன் ஒரு நெருப்பு வளையம்போல தோன்றி வானில் வித்தை காட்டும். 

26ஆம் தேதி காலை 8.06 மணிக்கு துவங்கும் கிரகணமானது 11.14 மணி வரை நீடிக்கும். 

குறிப்பாக காலை 9.31 மணி முதல் 9.34 மணி வரை 3 நிமிடங்கள் வளைய சூரிய கிரகணம் நீடிக்கும். 

அதேபோல் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது என்றும் அவ்வாறு பார்க்க நேர்ந்தால் கண்களின் விழித்திரை பாதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கிறார் விஞ்ஞானி சவுந்தர பெருமாள். 

பொதுவாக சூரிய கிரகணத்தின் போது சாப்பிடக் கூடாது, சமைக்க கூடாது, கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக் கூடாது என்பது போன்ற கருத்துகளை கேள்விப்பட்டிருப்போம். அதேநேரம் கிரகணத்தை முன்னிட்டு கோயில் நடைகளும் அடைக்கப்பட உள்ளது. நம்பிக்கை என்பதை தாண்டி கிரகணத்தன்று கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. 

ஆனால் அதெல்லாம் கட்டுக்கதைகள் என்றும் அறிவியல் பூர்வமாக எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்கிறார் விஞ்ஞானி வெங்கடேஸ்வரன். 

அதேநேரம் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், ஈரோடு, மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் சூரிய கிரகணம் முழுமையாக தெரியும். 

இதற்காக மதுரை, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் இந்த சூரிய கிரகணம் தெரிவதால் இதனை பார்க்க பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதற்கு அடுத்ததாக 2020-ம் ஆண்டு அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்திலும், 2031-ம் ஆண்டு தமிழ்நாட்டில் மதுரை மற்றும் தேனியிலும் சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.


Next Story

மேலும் செய்திகள்