"ஐ.ஐ.டியின் 3 பேராசிரியர்களே காரணம்" : கேரள மாணவி தற்கொலை விவகாரத்தில் புதிய திருப்பம்

சென்னை ஐ.ஐ.டி.யில் கேரள மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனது தற்கொலைக்கு 3 பேராசிரியர்களின் துன்புறுத்தலே காரணம் என அவர் எழுதி வைத்துள்ள கடிதம் கிடைத்துள்ள நிலையில் விசாரணை வளையம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டியின் 3  பேராசிரியர்களே காரணம்   : கேரள மாணவி தற்கொலை விவகாரத்தில் புதிய திருப்பம்
x
கல்வித்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளோடு சென்னை ஐ.ஐ.டியில் காலடி எடுத்து வைத்த முதுகலை பட்டதாரி மாணவி பாத்திமா லத்தீப், இன்று உயிரோடு இல்லை. தனது தற்கொலைக்கு ஐ.ஐ.டியில் பணியாற்றும் மூன்று பேராசிரியர்களே காரணம் என்று அவர் எழுதி வைத்துள்ள மரண சாசனம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது... என்ன நடந்தது ஐ.ஐ.டியில்....
கடந்த 8-ஆம் தேதி கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்கிற முதுநிலை மாணவி சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மகளிர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதும் மற்றும் குடும்பத்தை பிரிந்த சோகத்தின் காரணமாகவும் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தரப்பில் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தமிழக போலீசாரின் விசாரணை மீது திருப்தி அடையாத மாணவியின் தந்தை அப்துல் லத்தீப், செவ்வாய்கிழமையன்று,  கேரளா முதலமைச்சர் அலுவலகத்திற்கு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தனது மகளின் மரணத்திற்கு காரணம் சென்னை ஐஐடியை சேர்ந்த 3 பேராசிரியர்கள் தான் காரணம் எனவும் அதை தனது மகளின் செல்போனில் இருந்த தற்கொலை கடிதத்தின் மூலம் தெரிந்து கொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வழக்கை நியாயமாக விசாரித்து தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க உதவ வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்த நிலையில் அந்த கடிதம் தமிழக முதலமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு அந்த வழக்கை தீவிர விசாரணைக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான புகாரளிக்க வியாழக்கிழமை மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது மகள் தொலைபேசியில் பேசும் போது அவருக்கு ஏதே பிரச்னை இருப்பதை உணர்ந்ததாகவும், இப்போது அவளை இழந்து நிற்பதாக அவரது தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு நீதி வேண்டி, சமூகநீதி மாணவர் இயக்கத்தினர் சென்னை ஐ.ஐ.டியை முற்றுகையிட்டனர்.
உயர்கல்வி நிலையங்களில் இது போன்ற மரணங்கள் தொடர்ந்து நிகழ்வதாக குற்றம்சாட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பாத்திமா லத்தீப் உயிரிழப்பு குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஐ.ஐ.டியில் நடக்கும் இது போன்ற மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்கும் இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறையின் விசாரணைக்கு பிறகே பாத்திமா லத்தீப் மரணத்தில் உள்ள குழப்பங்கள் தீரும்.




Next Story

மேலும் செய்திகள்