கர்ப்பம் அடைந்துள்ளதாக கூறி 6 மாதங்களாக சிகிச்சை - அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

கர்ப்பம் அடைந்துள்ளதாக நம்பி, அரசு மருத்துவமனையில் கடந்த 8 மாதங்களாக ஆசை ஆசையாய் பல்வேறு சிகிச்சை எடுத்து வந்த பெண், அது வெறும் நீர்க்கட்டி தான் என்பது தெரிய வந்த‌தை அடுத்து மருத்துவமனை வளாகத்திலே கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பம் அடைந்துள்ளதாக கூறி 6 மாதங்களாக சிகிச்சை - அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
x
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சந்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி வேடியப்பன்... கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இவரது மனைவி அஸ்வினிக்கு  வயிற்று வலி ஏற்பட்ட, அவரை பரிசோதித்த கல்லாவி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அவர் கர்ப்பமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் வேடியப்பனின் மொத்த குடும்ப‌மும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது... அன்றுமுதல் , குழந்தை ஆவலில், சத்து மாத்திரைகள், தடுப்பூசிகள், பரிசோதனைகள் என கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் அனைத்து சிகிச்சைகளுக்கும் முதல் ஆளாய் கல்லாவி மருத்துவமனைக்கு வந்து நின்றிருக்கிறார் அஸ்வினி... மருத்துவர்களும் மார்ச் மாதம் முதல் கர்ப்பிணிகளுக்கான அட்டை வழங்கி சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்த நிலையில், மீண்டும் வயிற்று வலியால் அவதி பட்ட அஸ்வினி, வலி தாங்க முடியாத‌தால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்த‌துள்ளார். இதில், வயிற்றில் இருப்பது கருவல்ல நீர்க்கட்டி தான் என்ற அதிர்ச்சி செய்தி தெரிய வந்துள்ளது. இதை ஏற்றுகொள்ள மனமில்லாத அஸ்வினி, வயிற்று வலியுடன் சேர்த்து மனவலியையும் தாங்கி கொண்டு மீண்டும் கல்லாவி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் நடந்ததை கல்லாவி அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் கண்ணீருடன் எடுத்து கூறிய அஸ்வினி, மீண்டும் தனக்கு ஸ்கேன் செய்து பார்க்குமாறு வேண்டியுள்ளார். ஆனால் இங்கும் அஸ்வினியின் பிரார்த்தனை பலன் தரவில்லை... இந்த முறை முறையாக ஸ்கேன் செய்த கல்லாவி அரசு மருத்துவர்கள், வேறு வழியின்றி, அது நீர்க்கட்டி தான் என்ற உண்மையை கூறியுள்ளனர். கரு அல்ல, கட்டிதான் என மருத்துவர்கள் கூறியதை கேட்டு அஸ்வினியின் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் ஆழ்ந்த‌து... உறவினர்கள் ஒருபுறம் மருத்துவர்களுடன் வாக்குவாத‌த்தில் ஈடுபட, 6 மாதமாக ஆசை ஆசையாய் சிகிச்சை பெற்றுவந்த அஸ்வினி தன் கணவர் தோள்களில் சாய்ந்த படி கதறி அழுதார். இந்த சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.  6 மாதங்களாக கர்ப்பிணிக்கான சிகிச்சை அளித்து,  பெண்ணை  உடல் ரீதியிலும், மன ரீதியிலும் வேதனைக்கு உள்ளாக்கிய, மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனை கலந்த ஆத்திரத்துடன் கோரிக்கை வைக்கின்றனர் அஸ்வினியின் உறவுகள்...

Next Story

மேலும் செய்திகள்