காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி - ரவுடியை காலில் சுட்டு பிடித்த போலீசார்

சென்னையில் ஒரு என்கவுன்ட்டர் நடந்து முடிந்துள்ள நிலையில், நெல்லையில் போலீசாரை தாக்கிய ரவுடியை காலில் சுட்டுப் பிடித்துள்ளனர்.
காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி - ரவுடியை காலில் சுட்டு பிடித்த போலீசார்
x
காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற பிரபல ரவுடியை சுட்டு பிடித்துள்ளனர் நெல்லை போலீசார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கராஜா. இவர் மீது 4 கொலை வழக்கு  உள்ளிட்ட 56 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் துப்பாக்கியுடன், ஒரு கொலை சம்பவத்தில் மாணிக்கராஜா ஈடுபட உள்ளதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து, உதவி ஆய்வாளர் இசக்கிராஜா  மற்றும் 5 காவலர்கள் கயத்தாறு அருகே உள்ள கார்த்திகை பட்டியில் உள்ள  தோட்டத்தில் மறைந்திருந்த மாணிக்கராஜாவை, விசாரிக்க சென்றனர். அப்போது, காவல்துறையினரை கண்டதும் அரிவாளால் இரண்டு காவலர்களை வெட்டி விட்டு ரவுடி மாணிக்க ராஜா, தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது.  உடனே, தற்காப்பிற்காக உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, ரவுடி மாணிக்கராஜாவை  துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  இதில்  ரவுடிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.   துப்பாக்கிச்சூட்டில்  காயமடைந்த ரவுடி நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, தமது கண்ணைக் கட்டிவிட்டு போலீசார் சுட்டதாக, மாணிக்கராஜா, கூச்சலிட்டார். 
இந்த சம்பவத்தில், காயமடைந்த காவலர்கள் மைதீன்கான் மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி மாணிக்கராஜா மீது நாலாட்டின் புத்தூர் காவல் நிலையத்தில் போலீசார் புதிய வழக்கை பதிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்