பிள்ளைகளுக்கு மட்டுமின்றி பெற்றோருக்கும் டியூஷன்... ஆசிரியையின் இலவச கல்விச் சேவை

பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்த தள்ளப்படும் குழந்தைகளின் வாழ்வியல் சூழலை மாற்றும் ஒரு முயற்சியாக பிள்ளைகளுக்கு மட்டுமின்றி பெற்றோருக்கு இலவச டியூஷன் எடுத்து வருகிறார், கடலூரை சேர்ந்த ஆசிரியை சசிகலா.
x
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக பல்வேறு புது முயற்சிகளை எடுக்கும் ஆசிரியை சசிகலா, கடலூர் மாவட்டம் கிள்ளை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பணியாற்றி வருகிறார். நடுநிலைக்கல்விக்கு பிறகு பெரும்பாலன மாணவர்கள் தங்கள் கல்வி படிப்பை பாதியிலேயே நிறுத்துவதற்கான காரணம் கண்டறிய விரும்பிய இவர், மாணவர்களிடம் இது குறித்து உரையாடினார். மது போதைக்கு அடிமையான தந்தை, வீட்டு வேலைக்கு செல்லும் அம்மா என்று தங்கள் மீது யாரும் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை என்பதே பெரும்பாலான குழந்தைகளின் பதிலாக இருந்தது. படிப்பறிவு அதிகம் இல்லாததால், தங்களுக்கான உரிமைகளை கேட்டு பெறவும், குடும்ப சூழலை மேம்படுத்துவும் வழி தெரியாமல் விழிக்கும் இப்பெண்மணிகளுக்கு, தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த  தீர்மானித்தார், சசிகலா. அதன்படி குழந்தைகளின் தாய்மார்களுக்கு அடிப்படை கல்வி கற்று கொடுக்க விரும்பிய இவர், அவர்களிடம் இது குறித்து தெரிவித்தார். 

முதலில் தயங்கிய அவர்கள் பிறகு சம்மதித்தார்கள். ஆரம்பத்தில் மூன்று பேருடன் தொடங்கி டியூஷனில் படிப்படியாக 11 பெண்கள் இணைந்தனர். 35 முதல் 50 வயதுக்கு உட்பட்ட இவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மட்டும் மாலை 2 மணி நேரம் டியூஷன் எடுக்கிறார், சசிகலா. தம்மிடம் படிக்கவரும் குழந்தைகளுக்கு பெண்களுக்கும் தேவையான எழுது பொருட்களையும், புத்தகங்களையும் இவரே வாங்கியும் கொடுத்துவிடுகிறார். திருவள்ளூவர் கூறியது போல், தாம் இன்பம் அடையும் கல்வியினாலே உலகத்தாரும் இன்பம் அடைவதைக் கண்டு மகிழ்விக்கும் இந்த ஆசிரியர், கல்வியால் ஏழை எளிய குழந்தைகளின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்