சினிமா பாணியில் ஃபேஸ்புக் மூலம் பெண்ணை ஏமாற்றிய நபர்

சினிமா பாணியில் அக்கா -மாமாவாக சிலரை நடிக்க வைத்து பெண்ணிடம் பல லட்சம் ரூபாய் வரதட்சணை பெற்ற போலி மருத்துவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது கைதாகியுள்ளார்.
சினிமா பாணியில் ஃபேஸ்புக் மூலம் பெண்ணை ஏமாற்றிய நபர்
x
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த கார்த்திக் , கொளத்தூரை சேர்ந்த பெண் ஒருவரிடம் மருத்துவர் என கூறி பேஸ்புக் மூலம் பழகியுள்ளார். மருத்துவர் என ஸ்டிக்கர் ஒட்டிய சொகுசு கார் மூலம் பெண்ணை ஏமாற்றிய கார்த்திக், சொந்தமாக மருத்துவமனை வைத்திருப்பதாகவும் கூறி பெண்ணை தன் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இவர்களது காதல் திருமணம் வரை செல்ல, சந்தர்பத்தை பயன்படுத்திகொள்ள நினைத்த கார்த்திக் பெண் வீட்டாரிடம் 15 லட்சம் ரூபாய்க்கும் மேல் வரதட்சணையாக பெற்றதாக தெரிகிறது. இது மட்டுமில்லாமல், வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும்,  75 ஆயிரம் ரூபாய் கேட்டதால் சந்தேகம் அடைந்த பெண் வீட்டார், வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களிடம் விசாரித்தபோது கார்த்திக் மருத்துவர் அல்ல என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயாராகி கொண்டிருந்த கார்த்திக்கிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் கார்த்திக் வெறும் 2 ஆண்டுகள் மட்டும் மருத்துவக்கல்லூரியில் படித்து விட்டு கோவையில் மருத்துவம் பார்த்துவந்த‌தும், இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக ஜெயக்குமார், வசந்தி என இருவரை அக்கா மாமாவாக நடிக்க வைத்த‌தும் விசாரணையில் தெரிய வந்த‌து. இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர்கள் கார்த்திக்கை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதாகியுள்ள கார்த்திக்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்