டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் குளறுபடி விவகாரம்: "தேர்வர்கள் குறைகளை தெரிவிக்க ஓரிரு நாளில் வாய்ப்பு"

தமிழகம் முழுவதும் நேற்று நடந்த குரூப்-4 தேர்வில் குளறுபடியான கேள்விகள் இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக, தேர்வர்கள் தங்களுடைய புகார்களை தெரிவிப்பதற்கான வாய்ப்பு ஒரிரு நாளில் வழங்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
x
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் குரூப்-4 நிலையில் காலியாக உள்ள ஆறாயிரத்து 500 காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. 13 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வில் ஒரு சில கேள்விகள் தவறாகவும், குளறுபடியாகவும் இடம்பெற்று இருந்தது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வினா எண் 186ல், பொருத்துக என்ற பகுதியில், ஆங்கில வழியில் "முதல் லோக்சபா கலைக்கப்பட்ட நாள்" எது என்றும், தமிழில், "குடியரசு தினம்" என்றும் கேட்கப்பட்டதால் தேர்வர்கள் குழப்பம் அடைந்ததாக கூறப்படுகிறமு. இதே போல் மேலும் சில கேள்விகள் குழப்பத்திற்கு உரியதாக இருந்தன. இந்த விவகாரம் குறித்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நந்த குமார் கூறும்போது, "கேள்விகள் குறித்து தேர்வர்கள் தங்களுடைய கருத்துகளை டி.என்.பி.எஸ்.சி. கவனத்திற்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு ஓரிரு நாளில் வழங்கப்படும் என்றும், அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்