கோடை காலத்திலும் வற்றாத 'நல்ல தண்ணீர் குளம்'...

தமிழகம் முழுவதும் வறட்சியால் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குளத்தில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.
x
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலத்தில் உள்ள குளத்தில் தற்போதும் தண்ணீர் நிரம்பி வழிகிறது. அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தமங்கலத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள குளம்தான் 'நல்ல தண்ணீர் குளம்'. இந்தக் குளத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் வற்றவே இல்லை. கரையைத் தொட்டபடி ததும்பி நிற்கும் நீர், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது. குடிநீர் தேவையைத் தவிர குளிப்பது முதல் கால்நடைகளின் தேவை வரை அனைத்துக்கும் இந்தக் குளத்து நீரையே கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் குளமும் கோடையில் வறண்டு கிடந்தது. அப்போது, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் இக்குளத்தை தூர்வாரும் பணிமேற்கொள்ளப்பட்டது. கிடைத்தவாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு சிறப்பாக பணியாற்றிய கிராம மக்கள், குளத்தை போதுமான அளவுக்கு தூர்வாரினர். மேலும் கரையைப் பலப்படுத்தினர். கரையைச் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியதுடன், குளத்தில் சீமைக்கருவேல மரங்கள் உள்ளிட்ட எதுவும் முளைக்காமல் பார்த்துக்கொண்டனர். அத்துடன், குளத்தின் கரையில் மரக்கன்றுகள் நட்டு வைத்துப் பராமரித்து வருகின்றனர். இவற்றின் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக கோடையிலும் தண்ணீர் வற்றாமல் இருக்கிறது. இந்தக் குளத்தில். மழைக் காலங்களில் அப்பகுதியில் பெய்யும் மழை நீர் முழுவதும் குளத்தைச் சென்றடையும் விதமாக வழி செய்துள்ளனர். இதனால், எப்போதும் தண்ணீர் குறையாமல் உள்ளது. இதனால், இந்த கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு என்ற பிரச்சினையே இல்லை. ஊராட்சி சார்பில் மக்களுக்கு போதுமான குடிநீர் வழங்கப்படுகிறது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி நிரம்பி வழியும் பட்சத்தில் அந்தத் தண்ணீரும் குளத்தைச் சென்றடையும் வகையில் வழி செய்யப்பட்டுள்ளது. தண்ணீருக்காக பல கிலோமீட்டர் நடந்தும், வாகனங்களில் எடுத்து வந்தும், விலை கொடுத்து வாங்கியும் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சாத்தமங்கலம் மக்களின் செயல் தமிழகத்துக்கே முன்னுதாரணமாக விளங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்