"ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்களை கட்டாய இடமாற்றம் செய்ய வேண்டும்" - பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை
'ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பணியாளர்களை கட்டாய இடமாற்றம் செய்ய வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இணை இயக்குநர் நாகராஜ முருகன், இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், இளநிலை உதவியாளர் முதல் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வரை 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிவோருக்கு, ஜூலை 3ஆம் தேதி மாவட்ட அளவில் விருப்ப கலந்தாய்வு நடத்தி, இடமாறுதல் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த மாறுதல் கலந்தாய்வு, எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில், பணியாளர்களை பாதிக்காத வகையில் நடத்த வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீவிர உடல் நலிவடைந்தவர்களை, முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் விருப்புரிமை அதிகாரத்தை பயன்படுத்தி முன்னுரிமை அளிக்கலாம் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும், 3 ஆண்டுகளுக்கு மேல், பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும், பள்ளிகல்வி இணை இயக்குநர் நாகராஜ முருகன் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story