மாநிலங்களவை துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் - மத்திய அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடு வெட்கக்கேடானது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
x
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் அமளிக்கு இடையே, நாடாளுமன்ற மாநிலங்களவையில், வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பரிசீலிக்காமல், யதேச்சதிகாரப் போக்குடன் மத்திய  அரசு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்திலும், ஈடுபட்டனர்.  மாநிலங்களவை துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்கொண்டுவரவும் மனு அளித்தனர். இந்த நிலையில், டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராஜ்நாத்சிங், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்துகொண்டவிதம் துரதிர்ஷ்டவசமானது, வெட்கக்கேடானது என்று குற்றம்சாட்டினார். நாடாளுமன்ற வரலாற்றில் இதுபோல நடப்பது இதுவே முதல் முறை என்றும், மக்களை தவறாக வழிநடத்துவது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறை அல்ல என்றும் குறிப்பிட்டார். மாண்புடன்  நடந்து கொள்வதே எதிர்க்கட்சிகளுக்கு அழகு என்றும், வேளாண் சட்ட விவகாரத்தில் விவசாய விளைபொருட்களுக்கான, குறைந்தபட்ச ஆதாரவிலை நிச்சயம் நிறுத்தப்பட மாட்டாது என்றும் ராஜ்நாத்சிங் உறுதிபடத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்