மகாராஷ்டிரா அரசியல் - அடுத்தடுத்த அதிரடி திருப்பம்

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உத்தரவிடுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
x
கடந்த மாதம் 24ம் தேதியன்று வெளியான மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் முடிவில், பாஜக 105 இடங்களையும், அதன் கூட்டணியாக போட்டியிட்ட சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. எதிரணியில் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும், காங்கிரஸ் 44 இடங்களையும் கைப்பற்றின. 

முதலமைச்சர் பதவி பிரச்சினையில் பாஜக, சிவசேனா  கூட்டணி முறிந்ததால், புதிய ஆட்சி அமைவதில் சிக்கல் எழுந்தது. எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாததால், நவம்பர் 12ஆம் தேதியன்று மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, பாஜக அணியில் இருந்து விலகிய சிவசேனா கட்சி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க தீர்மானித்தது. பல்வேறு குழப்பங்களுக்கு நடுவே, பாஜக அல்லாத அரசமைக்கும் முடிவில், நவம்பர் 22ஆம் தேதி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும், முதல்வராக உத்தவ் தாக்கரேவை ஆதரித்தன.

மறுநாள் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்கும் கனவில் சென்ற நிலையில், திடீர் திருப்பமாக நவம்பர் 23 ஆம் தேதி, அதிகாலை 5.47 மணிக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கப்பட்டு, பாஜக அரசு பதவியேற்றது. முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும்
துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித்பவாரும் பொறுப்பேற்றார். 

தேசிய அளவில் இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக ஆட்சி அமைத்ததும், ஆளுநரின் முடிவும் தவறானது என கூட்டணி கட்சிகளுடன் சிவசேனா, நவம்பர் 23 அன்று உச்ச நீதிமன்றம் சென்றது. இந்த வழக்கை விடுமுறை நாளாக இருந்தபோதிலும், நவம்பர் 24ஆம் தேதி, ஞாயிற்றுகிழமை அன்று அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

அப்போது குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்குமாறு ஆளுநர் கொடுத்த கடிதம் மற்றும், பாஜக ஆட்சியை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் கடிதங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த நாள் ஒத்தி வைத்தனர். திங்கள் கிழமை அதாவது இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், மனுதாரர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். 

பாஜக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவைத் தலைவரான அஜித் பவாரின் ஆதரவை தொடர்ந்து, ஆட்சி அமைத்தாக கூறினார். ஆளுநரின் முடிவில் நீதிமன்றங்கள் தலையிடவே முடியாது, அவரது அதிகாரத்தை நீதிமன்றங்கள் பறிக்க முடியாது என ஆளுநர் தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா வாதிட்டார்.

அஜித் பவார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மணீந்தர் சிங், தமது தரப்பினர் தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்றார். குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்ய ஆளுநர் ஏன் அவசரம் காட்ட வேண்டும் என்ற சிவசேன தரப்பு வழக்கறிஞர் கபில்சிபல், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் கோரினார்.

தேசியவாத காங்கிரஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, பாஜக ஆட்சி அமைத்ததன் மூலம், ஜனநாயக மோசடி நடந்துள்ளது என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நாளை காலை 10.30 மணிக்கு உத்தரவிடுவதாக கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்