"பேச்சுரிமை நீதிசார் விவகாரங்களுக்கும் பொருந்தும்"- இந்திய தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு

வழக்குகள் விசாரணையின்போது நீதிபதிகளின் கருத்துக்களை செய்தியாக்குவதற்கு ஊடகங்களுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
x
கொரோனா காலத்தில் தேர்தல் நடத்தியது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் மீதான விமர்சனத்தை  செய்தியாக்க ஊடகங்களுக்கு தடை விதிக்கக்கோரி  இந்திய தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீது நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் பேச்சுரிமை, கருத்துரிமை என்பது நீதிமன்றங்களில் நடைபெறும் விசாரணைகளை குறித்து செய்தி சேகரிப்பதையும் உள்ளடக்கியதே என்பதால் நீதிமன்ற விசாரணை நடைமுறைகளை செய்தி ஆக்கக்கூடாது என்று ஊடகங்களுக்கு கூற முடியாது என தெரிவிக்கப்பட்டது. புதிய தொழில்நுட்பம் மூலம் விரைவாக உடனுக்குடன் செய்திகளை வெளியிடுவது, பிரசுரிப்பது என்பது ஊடக பேச்சு மற்றும் கருத்துரிமையின் ஒரு பகுதியே ஆகும் என்றும், பேச்சுரிமை, கருத்துரிமை நீதிசார் விவகாரங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டது. எனவே செய்தி சேகரிப்பது, வெளியிடுவது தொடர்பாக அரசமைப்பு நிறுவனங்கள் குறை கூறுவதை விடுத்து தங்களது செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக்குற்றம் கூட சுமத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியது கடுமையானது தான், ஆனால்  ஆணையத்தை தீர்க்கமாக குற்றவாளி எனக்கூறவில்லை என கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் நீதிபதிகள் கருத்தை தெரிவிக்கும்போது கவனமாக வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தால் வழக்கில் எழுந்த இந்த  பிரச்சினையை தவிர்த்திருக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற நடவடிக்கை , நீதிபதி கருத்துக்களை ஊடகங்கள்  செய்தியாக்குவதை தடை விதிக்க முடியாது எனக்கூறி  இந்திய தேர்தல் ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்

Next Story

மேலும் செய்திகள்