விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு - திஷா ரவி கைது பின்னணி விபரம்...

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் திஷா ரவி கைது செய்யப்பட்டதன் பின்னணி விபரம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு - திஷா ரவி கைது பின்னணி விபரம்...
x
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாயிகளுக்கு அமெரிக்க பாப் பாடகி ரிஹானாவும், சுவீடன் சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டாவும் டுவிட்டரில் ஆதரவு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது விவசாயிகளை ஆதரிக்க கோரிக்கை விடுத்து கிரேட்டா தன்னுடைய டுவிட்டரில் 4 ஆம் தேதி பகிர்ந்த டூல்கிட் பிரச்சினையை பூதாகரமாக்கியது. அப்போது, உடனடியாக வன்முறையை தூண்டும் விதமான தகவல் இடம்பெற்றிருந்த டூல்கிட்டை நீக்கிவிட்டு மற்றொரு டூல்கிட்டை பகிர்ந்தார். ஆனால், முதலில் கிரேட்டா பதிவு செய்த டூல்கிட்டில் இடம்பெற்றிருந்த தகவல்கள் போராட்டம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை அம்பலப்படுத்தியது.

ஏற்கனவே, போராட்டத்திற்கு சமூக வலைதளங்கள் மூலம் திரட்டப்பட்ட ஆதரவு பின்னணியில் சர்வதேச சதியிருப்பதாக சந்தேகித்த டெல்லி காவல்துறை, கிரேட்டா பகிர்ந்த டூல்கிட் தங்களுடைய சந்தேகத்தை உறுதி செய்திருக்கிறது என்றது. டெல்லி காவல்துறை சர்ச்சைக்குரிய டூல்கிட்டை உருவாக்கியவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது. இந்தியாவின் நற்பெயரை குலைக்க திட்டமிட்டு சர்வதேச அளவில் பிரச்சாரம் நடத்தப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில்  குற்றம் சாட்டப்பட்டது. சமூக வலைதளங்களில் உருவாக்கப்படும் டூல்கிட் என்பது பொதுவாக ஒரு குறிப்பிட்ட விஷயம் அல்லது பிரச்சினை தொடர்பான வழிகாட்டும் ஆவணமாக கருதப்படுகிறது. 

பிரச்சினை குறித்த தகவல்கள் அடங்கிய டிஜிட்டல் கோப்பாக டூல்கிட் அமைகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட பிரச்சினைக்கு மக்களின் ஆதரவை கோருவதுடன், அதனை தீர்ப்பதற்கான வழிகளையும் அணுகவும் செய்யலாம். ஒருவர் உருவாக்கி பகிரும் டூல்கிட்டை மற்றொருவர், தனக்கு தெரிந்த தகவலுடன் மாற்றி அமைக்கவும் செய்யலாம். விவசாயிகள் போராட்ட ஆதரவு விவகாரத்தில் கிரேட்டா முதலில் பகிர்ந்த டூல்கிட் தொடர்பாக விசாரித்துவந்த டெல்லி போலீஸ், பெங்களூருவை சேர்ந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் திஷா ரவியை கைது செய்துள்ளது. டூல்கிட் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் முதல் நபர் திஷா ரவி.

டெல்லி நீதிமன்றத்தில் திஷா ரவியை ஆஜர்படுத்திய டெல்லி காவல்துறை 5 நாட்கள் விசாரணைக்கு எடுத்துள்ளது. கடந்த 3 ஆம் தேதி திஷா ரவி டூல்கிட்டை திருத்தியுள்ளார் என்றும், அவருடைய செல்போன்களில் இருந்த தரவுகளை நீக்கிவிட்டார் என்றும் போலீஸ் தெரிவித்துள்ளது. தேசத்துரோக பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், திசாவுக்கு காலிஸ்தான் அமைப்புடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரிக்க வேண்டியிருப்பதாகவும் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சர்ச்சைக்குரிய டூல்கிட்டில் இரண்டு வரிகளை மட்டும் திருத்தியதாக  திஷா ரவி தரப்பில்  கூறப்பட்டுள்ளது. 

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க கேட்டுக்கொண்டதுடன், அவர்களுக்கு உணவு வழங்கவே கோரிக்கை விடுத்தார் எனவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். திஷாவை காவலில் எடுத்துள்ள டெல்லி காவல்துறை டூல்கிட் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்