ஆவேச டுவிட்.. அதிரடி நீக்கம்... கங்கனா பதிவுகளை நீக்கிய டிவிட்டர் நிர்வாகம்

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த பாப் பாடகி ரிஹானாவை கடுமையாக விமர்சித்து, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் வெளியிட்ட இரண்டு பதிவுகளை டிவிட்டர் நிர்வாகம் அதிரடியாக நீக்கியுள்ளது.
ஆவேச டுவிட்.. அதிரடி நீக்கம்... கங்கனா பதிவுகளை நீக்கிய டிவிட்டர் நிர்வாகம்
x
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த பாப் பாடகி ரிஹானாவை கடுமையாக விமர்சித்து, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் வெளியிட்ட இரண்டு பதிவுகளை டிவிட்டர் நிர்வாகம் அதிரடியாக நீக்கியுள்ளது. பாப் பாடகி ரிஹானா யார்?, கங்கனா ரணாவத் என்ன பதிவிட்டார்? என்பதை பார்க்கலாம்...  

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியின் எல்லை பகுதிகளில் விவசாயிகள் முகாமிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா குரல் கொடுத்துள்ளார். விவசாயிகளின் போராட்டம் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை என்று ரிஹானா கேள்வி எழுப்பி டிவிட்டரில் கருத்து பதிவிட்டார். 

இதை பார்த்து ஆவேசமடைந்த இந்திய வெளியுறவுத் துறை, இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் யாரும் தலையிட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளது.  ஒரு பாடகியின் டுவிட்டுக்காக இந்திய வெளியுறவுத் துறை பதிலளித்தது இதுவே முதல் முறையாக இருக்கும். ரிஹானாவுக்கு எதிராக இந்திய பிரபலங்களும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டனர். 

ஒரே ஒரு ட்வீட் பதிவிட்டதன் மூலம் இந்தியாவின் பல பகுதிகளிலும் பேசப்படும் ரிஹானா யார்? 

கரீபியன் தீவு நாடான பார்படோஸை பூர்விகமாகக் கொண்டவர் ரிஹானா. 32 வயதான  இவர், பாடகி, இசையமைப்பாளர், நடிகை, ஆடை அலங்கார அமைப்பாளர், தொழிலதிபர் என பண்முகத்தன்மை கொண்டவர்.  காண்ட்ராஸ்ட் என்ற பெண்கள் இசைக்குழுவை தனது 14ஆவது வயதில் உருவாக்கியவர் ரிஹானா. 2005ஆம் ஆண்டு Music of the Sun என்ற ஆல்பத்தையும்,  2006ஆம் ஆண்டில் A Girl like Me என்ற ஆல்பத்தை வெளியிட்டு இசையுலகின் கவனத்தை ஈர்த்தார். ரிஹானாவின் 3ஆவது ஆல்பம் Good Girl Gone Bad உலக அளவில் அவருக்கு புகழை தேடித் தந்தது.

இசை மற்றும் நடிப்பு தவிர மனிதநேய செயல்களை செய்து வருகிறார், பாப் பாடகி ரிஹானா. ஏழைகளின் கல்வி மற்றும் மருத்துவத்திற்காக உதவ ரிஹானா அறக்கட்டளை நடத்தி வருகிறார். இசை நிகழ்ச்சிகள் மூலம் திரட்டப்பட்ட நிதியை கொரோனா தடுப்பு மற்றும் புயல் நிவாரணப் பணிகளுக்கு வழங்கி இருக்கிறார். 

டிவிட்டரில் 10 கோடி, பேஸ்புக்கில் 8 கோடி, இன்ஸ்டாகிராமில் 9 கோடி ஃபாலோயர்களைக் கொண்டவர் ரிஹானா. அவரின் டுவிட் பதிவால் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு சர்வதேச அளவில் கூடுதல் கவனம் கிடைத்துள்ளது. 

இதனிடையே, பாப் பாடகி ரிஹானாவின் கருத்து உலக அளவில் கவனம் பெற்ற நிலையில், அவரை பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கடுமையாக விமர்சித்தார். 

டெல்லியில், போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள் தீவிரவாதிகள் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் டுவிட்டரில் ஆவேசமாக பதில் அளித்ததுடன், அமைதியாக இரு முட்டாளே என்று பாப் பாடகி ரிஹானாவை கடுமையாக சாடியிருந்தார். 

நடிகை கங்கனாவின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்களால், டிவிட்டரில் அனல் பறந்தது. இந்நிலையில், ரிஹானா குறித்து கங்கனாவின் பதிவுகளை டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. விதிகளை மீறும் வகையில் உள்ளதால் நடவடிக்கை எடுத்துள்ளதாக டிவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது சமூக வலைதளங்களில் பரபரப்பான பேசுபொருளாக மாறியிருக்கிறது. 


Next Story

மேலும் செய்திகள்