காலிஸ்தான் டுவிட்டர் கணக்குகள் கண்காணிப்பு - செய்திகள் சில தொகுப்பு

குடியரசு தினத்தில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது தொடர்பாக காலிஸ்தான் ஆதரவு டுவிட்டர் கணக்குகளை டெல்லி போலீஸ் கண்காணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காலிஸ்தான் டுவிட்டர் கணக்குகள் கண்காணிப்பு - செய்திகள் சில தொகுப்பு
x
குடியரசு தினத்தில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது தொடர்பாக காலிஸ்தான் ஆதரவு டுவிட்டர் கணக்குகளை டெல்லி போலீஸ் கண்காணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காலிஸ்தான் ஆதரவாளர்களின் கணக்குகள் அடையாளம் காணப்பட்டு, அதிலுள்ள தகவல்கள் திரட்டப்படுகிறது. இதுபோன்ற கணக்குகளில் வன்முறையை தூண்டும் வகையில் பல டுவிட்கள் இடம்பெற்று இருந்ததாகவும் இதுகுறித்து டெல்லி போலீஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச எல்லை காசிபூரில் போராட்டம் நடத்திவரும் பாரதிய கிசான் யூனியனின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாய்த், மர்ம நபர் ஒருவரை கன்னத்தில் அறையும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ராகேஷ் பேசுகையில், சம்பந்தப்பட்ட நபர் தங்களுடைய அமைப்பை சேர்ந்தவர் இல்லை என்றும் அவர் தன்னுடைய கைகளில் தடியை கொண்டிருந்தார் என்றும் கூறியுள்ளார். மேலும், மர்ம நபர் செய்தியாளர்களிடம் தவறாக நடந்துக்கொண்டார் எனக் கூறிய ராகேஷ், தவறான நோக்கம் கொண்டவர்கள் போராட்டக்களத்தைவிட்டு வெளியேற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வாட் வரியில் 2 சதவீதத்தை குறைத்து ராஜஸ்தான் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இதையடுத்து அந்தமாநிலத்தின் டீசலுக்கான வாட் வரி 36 சதவீதமாகவும், பெட்ரோலுக்கான வாட் வரி 26 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இதைதொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 92 ரூபாய் 51 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டர் 84 ரூபாய் 62 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

லடாக்கில் கடும் குளிரால் உறைந்து காணப்படும் சான்ஸ்கார் நதியில்  மலையேற்றம் செய்ய சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். லடாக்கில் பனி சூழ்ந்த மலை தொடர்கள் சுற்றுலா பயணிகளின் விருப்பமான இடங்களில் ஒன்றாக உள்ளது. தற்போது குளிர்காலம் தொடங்கியதால் சாகசப் பயிற்சியில் ஆர்வம் கொண்டவர்கள் மலைகளுக்கு மத்தியில் உறைந்து கிடக்கும் நதியில் மகிழ்ச்சியாக நடந்து செல்கின்றனர்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் இளைஞர் காயம் அடைந்துள்ளார். பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஷாகாபூர் செக்டாரில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் பதிலடியை கொடுத்தது.  காயம் அடைந்த இளைஞரை மீட்ட ராணுவ வீரர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. வாரணாசி, பிரக்யாராஜ், மீரட் உள்ளிட்ட பகுதிகளில் நிலவிய கடும் பனியால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பொதுமக்கள் வெளியேற வரமுடியாத அளவிற்கு பனிபொழிவு காணப்பட்டதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. இதற்கிடையே அங்கு இன்று வெப்ப நிலை குறைந்தப்பட்சம் 9 டிகிரி செல்சியசாகவும், அதிகப்பட்சம் 17 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

டெல்லியில் கடுமையாக பனி சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முன்னால் செல்லும் வாகனங்கள், மனிதர்கள் தெரியாத சூழலில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்ட வண்ணம் ஊர்ந்து சென்றன. பனிமூட்டம் காரணமாக 27 ரெயில்கள் காலதாமதமாகியுள்ளது என வடக்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது. இதற்கிடையே டெல்லியில் இன்று வெப்ப நிலை குறைந்தப்பட்சம் 5 டிகிரி செல்சியசாகவும், அதிகப்பட்சம் 21 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்