மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி

மகாராஷ்டிராவில் பா.ஜ.க., சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி
x
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே, பாஜக, சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வந்த நிலையில், இறுதி நிலவரப்படி பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது . 288 இடங்களை கொண்ட மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக, சிவசேனா கூட்டணிக்கு 161 இடங்கள் கிடைத்துள்ளதால், மீண்டும் இந்த கூட்டணியே ஆட்சி அமைக்கிறது. இதுபோல, மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தல் மூலமாக, சிவசேனா கட்சியின் நிறுவன தலைவர் பால்தாக்கரேயின் பேரனும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்யா தாக்கரே, அரசியல் களத்தில் கால் பதித்துள்ளார். மும்பை வொர்லி தொகுதியில் 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், ஆதித்யா தாக்கரே வெற்றி பெற்றிருக்கிறார். பாஜக கூட்டணி ஆட்சி அமைவதில் சிவசேனா  பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்ற நிலையில், ஆதித்யா தாக்கரேவுக்கு முதலமைச்சர் பதவி வழங்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. இதை வலியுறுத்தி உருவாக்கப்பட்ட 'ஹேஷ்டேக்' ஒன்று டுவிட்டரில் டிரெண்டாகி 4வது இடத்தை பிடித்தது. இதுபோல, முதலமைச்சர் பதவியை தலா இரண்டரை ஆண்டுகளுக்கு பாஜகவும் சிவசேனாவும் பகிர்ந்து கொள்வது என தேர்தலுக்கு முன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உத்தவ் தாக்கரே, அமித் ஷா இடையிலான இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துமாறு சிவசேனா கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, மகாராஷ்டிராவில் வெற்றி பெற்றுள்ள சுயேச்சைகள் 13 பேர், பாஜக-வில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக, முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்