செல்ஃபி எடுக்க பிரமாண்டமான பாலத்தை முற்றுகையிடும் பொது மக்கள் : என்று தணியும் இந்த 'செல்ஃபி மோகம்'?

இந்தியாவின் அடையாளங்களுள் ஒன்றாக மாறிப் போன, பிரமாண்டமான பாலத்தில் ஆபத்தான முறையில் செல்ஃபி எடுப்பவர்களால் ஏற்படும் பிரச்சினைகளை பதிவு செய்கிறது இந்த தொகுப்பு...
செல்ஃபி எடுக்க பிரமாண்டமான பாலத்தை முற்றுகையிடும் பொது மக்கள் : என்று தணியும் இந்த செல்ஃபி மோகம்?
x
`டெல்லி சிக்னேச்சர் பாலம்'(Signature Bridge...) இந்தியாவின் முக்கிய அடையாளங்களில், ஒன்றாக மாறி விட்டது. இதன் பிரம்மாண்டம், காண்போரைக் கவர்ந்திழுத்து வருகிறது. ஒரு முறையாவது, பாலத்தில் பயணம் போகலாம் என்று நினைப்பவர்கள் செய்யும் சாகசம் தான் இப்போது ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்படியெல்லாம் செல்ஃபி மோகம் ஆட்டுவிக்கிறதே என்று, அச்சப்பட வைத்துள்ளது.

இந்த பாலம், சுமார் 14 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. 2004-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த பாலத்துக்கு, 2007-ம் ஆண்டு தான் டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வட கிழக்கு டெல்லியையும், காஜியாபாத் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளையும் இணைக்கும் வகையில், யமுனை ஆற்றின் குறுக்கே வாஜிராபாத்தில், இந்த பாலம், பிரம்மாண்டமாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது.  

2011-ம் ஆண்டு சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, 2013-ல் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், 2017 ஜூலை முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு, நீண்டு கொண்டே சென்ற நிலையில், தற்போது தான் பாலம் திறக்கப்பட்டது. இந்த பாலம் அமைக்க டெல்லி அரசு சார்பில் ஆயிரத்து 344 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. 154 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கோபுரம் காண்பவர்களை கவரும் ஈர்க்கும் வகையில் உள்ளது. கிழக்குப் பகுதியில் 1 புள்ளி 8 கிலோமீட்டர் தூரமும், மேற்குபகுதியில் 1 புள்ளி 5 கிலோமீட்டர் தூரத்தையும் உள்ளடக்கிய இந்த பாலத்தில் சைக்கிள் ஓட்டிகளுக்கு தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த பாலத்தின் மேல் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 50 பேர் செல்லும் வகையிலான 4 லிஃப்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பாரிஸில் உள்ள ஈஃபிள் டவரில் பார்க்கும்போது கிடைக்கும்  அனுபவத்தை இந்த பாலம் தரும் என பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இரு கைகளை கூப்பி, 'வணக்கம்' சொல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம், இந்தியாவின் சமச்சீரற்ற முதல் பாலமாக கருதப்படுகிறது. 250 மி.மீ. தடிமனான எக்கு தகடு மூலம் கட்டப்பட்டுள்ளது. டெல்லியின் ரிங் ரோடு பகுதியிலிருந்து வாஜியாபாத்தை 8 வழிச்சாலை மூலம் இந்த பாலம் இணைப்பதால், பயண நேரம் ஏறக்குறைய 30 நிமிடத்துக்கு மேலாகக் குறையும். பிரம்மாண்டத்தை சொல்லிக் கொண்டே போகலாம்... 

ஆனால், இந்த பாலத்தின் மீது, ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுப்பது, காவல்துறைக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. பாலத்தில் பயணம் செய்யும் பொது மக்கள் விதவிதமாக போட்டோ எடுக்க ஆரம்பித்து விட்டனர். செல்ஃபி மோகத்தினால் ஆபத்தை உணராமல் சிலர் செய்யும் செயல், பலரையும் பாதிக்கிறது. ஒரு கட்டத்தில், சிலர் திடீரென நிர்வாண ஆட்டம் போடவும் செய்தனர். 

வாகனத்தில் இருந்தபடியே உடலை வெளியில் நீட்டிக் கொண்டும், பாலத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பிகளின் மீது ஏறி நின்றும், செல்ஃபி எடுக்கின்றனர். ஆபத்தை உணராமல் மக்கள் செய்யும் இதுபோன்ற செயல்கள் விலைமதிப்பில்லாத உயிர்களைக் காவு வாங்குகின்றன என்கின்றனர் காவல்துறையினர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர், 28 பள்ளி மாணவர்களைப் பலி வாங்கிய பாலத்திற்கு பதிலாகவே இந்த புதிய பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், செல்ஃபி மோகம், விபத்திற்கு வித்திடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. என்று தணியும், இந்த செல்ஃபி மோகம்?... 
  

Next Story

மேலும் செய்திகள்