இன்று நடிகை நயன்தாரா பிறந்த நாள் : நயன்தாரா 'லேடி சூப்பர் ஸ்டார்' ஆனது எப்படி?

அறிமுகமான நாளில் இருந்து தற்போது வரை உச்ச நட்சத்திரமாகவே நிற்கிறார் நயன்தாரா. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் ஆனது எப்படி?அலசுகிறது பிறந்த நாள் சிறப்புத் தொகுப்பு...
இன்று நடிகை நயன்தாரா பிறந்த நாள் : நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் ஆனது எப்படி?
x
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். கல்லூரியில் படிக்கும்போதே பகுதி நேரமாக மாடலிங் மற்றும் விளம்பர துறையில் நுழைந்த நயன்தாரா, அதன்மூலம் மலையாளத் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். பின்னர் சரத்குமாரின் ஐயா படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.

தமிழில் அறிமுகமான 2-வது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, வந்த வேகத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராக உயர்ந்தார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர், வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுடன் காதல் வயப்பட்டதாக கூறப்பட்டது. இவர்களது காதல் விவகாரம் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பின்னர், சினிமாவில் நடிப்பதை படிப்படியாகக் குறைத்து கொண்ட நயன்தாரா, அஜித்துடன் நடித்த பில்லா படத்தின் மூலம் மீண்டும் மறுபிரவேசம் செய்தார்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகை காதல் விவகாரத்தில் சிக்கிவிட்டாலே அவரது கரியர் முடிந்துவிடும் என்ற வழக்கத்திற்கு மாறாக, நயன்தாரா விஷயத்தில், காதல் தோல்விக்கு பிறகுதான் அவருடைய கேரியர் உச்சத்தை தொட ஆரம்பித்தது. 2015-ம் ஆண்டு மாயா, நானும் ரவுடிதான் என நயன்தாராவுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியான படங்கள் அடுத்தடுத்து வெற்றியடைந்தது.

அதேபோல் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தியதால், மற்ற நடிகைகளிடம் இருந்து
வித்தியாசப்பட்டார் நயன்தாரா. இதுதான் அவரை தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக்கியது. இதில் ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு பாணியில் நடித்த நயன்தாரா நடிப்பில் ரசிகர்களைக் கவர்ந்தார்.

படத்தில் நயன்தாரா இருக்கிறார் என்ற காரணத்தினாலேயே இன்று ஒரு படம் பூஜை போட்ட அடுத்த நொடியே பல கோடிகளுக்கு வியாபாரம் ஆகிறது.

தவிர அறம் போன்ற படங்களின் அசுர வெற்றி, நயன்தாராவை மனதில் வைத்து இன்று பல கதைகள் உருவாக்கப்படுகின்றன. இதன்மூலம் ஆண் நடிகர்கள் மட்டுமே கோலோச்சும் தமிழ் திரையுலகில் ஒரு நடிகையாக நயன்தாரா ஆளுமை செலுத்திவருகிறார்.

மாயா, டோரா, கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் என அழுத்தமான கதைகளை மட்டுமே நம்பி படங்களை தேர்வு செய்யும் நயன்தாரா, விஜய், அஜித், ரஜினி என்று முன்னணி நட்சத்திர நடிகர்களுடனும் இணைந்து நடிக்கத் தவறுவதில்லை.

கடந்த ஆண்டு பண்பலை வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்த நயன்தாரா, தான் செய்த ஒரே தவறு கஜினியில் நடித்ததுதான் என்றார். கதை சொல்லப்பட்டபோது தனது கதாப்பாத்திரத்துக்கு முக்கியத்துவம் தெரிந்ததாகவும், ஆனால் படம் வெளியானபின்தான் உண்மையை புரிந்துகொண்டதாகவும் வருத்தத்தை பதிவு செய்தார்.

அப்போது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினாலேயே கதைகளை கவனமுடன் தேர்வு செய்ய தொடங்கியதாகக் கூறுகிறார். அதுவே அவரை இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து விட்டாலும் ஒவ்வொரு முறை நயன்தாரா படம் வெளியாகும்போதும், ரசிகர்கள் அவருக்காகவே தியேட்டர்களை நோக்கி படையெடுக்கின்றனர் என்பது நிதர்சனம்.

படத்தில் காதல் காட்சிகளுக்கும், கவர்ச்சிப் பாடல்களுக்கும் கதாநாயகிகளைப் பயன்படுத்தி வருவது ஒருபக்கம் இன்னமும், தொடர்ந்து கொண்டிருக்க, நயன்தாராவின் வெற்றி தமிழ் திரையுலகில் புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என்றே சொல்லலாம்.Next Story

மேலும் செய்திகள்