இன்று இசைஞானி இளையராஜா பிறந்த நாள்..!

இசைஞானி இளையராஜா இன்று தமது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
இன்று இசைஞானி இளையராஜா பிறந்த நாள்..!
x
இசைஞானி இளையராஜா இன்று தமது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரை பற்றிய ஒரு தொகுப்பை இப்போது பார்ப்போம். 

தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்த இளையராஜா 1976 ஆம் ஆண்டு 'அன்னக்கிளி' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். மேற்கத்திய இசைக் கருவிகளை கொண்டு  அவர் மெட்டமைத்த பாடல்கள் தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் இசைத்தன. இளையராஜா பாடல்கள் பல ஆண்டுகள் கடந்தும் ரசிகர்களுடன், இன்றும் இரண்டற கலந்துள்ளன. 

கடந்த 44 ஆண்டுகளாக இளையராஜா இசையில் வெளி வந்த ஆயிரக்கணக்கான இனிமையான பாடல்கள் இன்றைய தலைமுறையினரின் விருப்பமாக இன்றும் உள்ளது. அவரது இசைக்காகவே பல திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டன. பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களின் உள்ளுணர்வோடு ஒன்றிப் போயின. பாடல்கள் மட்டுமன்றி ரீ-ரெக்கார்டிங் என்னும் பின்னணி இசையிலும் பிதாமகனாக இளையராஜா திகழ்கிறார். அவர் அமைத்த இசைக் கோர்வைகள் வாத்தியங்களால் வாசிக்கப்பட்டு வெளிப்படும் போது திரைப்பட காட்சிகள் முழுமை பெற்று ரகிர்களின் மனதை கொள்ளையடிக்கும்.  

கர்நாடக ராகங்களை அடிப்படையாக கொண்டு மேற்கத்திய வாத்தியங்களை இசைக்க வைத்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியான இளையராஜாவின் பிரபலமான பாடல்கள் அவரது ரசிகர்களுக்கு எக்காலத்திலும் பொக்கிஷமாகத்தான் இருக்கும். இசை மூலம் உலகை தன்பக்கம் ஈர்த்த இளையராஜாவின் சிம்பொனி ஆல்பங்கள் அவரது ஆழ்ந்த திறமையின் உச்சமாகும்.

இசைஞானி இளையராஜாவின் ராஜாங்கம் அவரது பல கோடி ரசிகர்களின் உள்ளங்களில் என்றும் தொடரும். கொரோனா பாதிப்பில் உலகமே சோகத்தின் விளிம்பில் நிற்க, மக்களை காப்பாற்ற களத்தில் நின்றவர்களுக்காக, இளையராஜா வெளியிட்ட பாடல் புதிய நம்பிக்கையை தந்தது. இசையுடன் இசைய வைத்தது.. 

1943 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்த இளையராஜா இன்று தமது 77-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது இசைப்பணி தொடந்து அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். 








Next Story

மேலும் செய்திகள்