"அண்ணாமலையின் ஒரு ட்வீட்டால் திமுக ஆட்சிக்கே பெரிய பூகம்பம்" - ராமேஸ்வரத்தில் இறங்கி அடித்த அமித் ஷா.. பெரும் பரபரப்பு

x

அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரையை தொடங்கி வைத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, இது ஊழல், குடும்ப ஆட்சியை அழிக்கும் யாத்திரை என முழங்கியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களிலும் வெற்றியை குவிக்க மிஷன் சவுத் திட்டத்தை தீவிரமாக கையில் எடுத்திருக்கிறது பாஜக.

இதற்கு கைகொடுக்கும் வகையில் பிரதமர் மோடியை பாஜக ராமநாதபுரத்தில் களமிறக்கலாம் என எதிர்பார்ப்புக்கு மத்தியில், அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை ராமேஸ்வரத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த யாத்திரைக்காக பாஜக தொண்டர்கள் ராமேஸ்வரத்தில் குவித்தனர். காலை முதலே பாஜகவினர் ஆட்டம் பாட்டம் என களைக்கட்டியது

யாத்திரையை தொடங்கி வைக்க டெல்லியிலிருந்து வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, மதுரையில் இறங்கியதும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து ஹெலிகாப்டரில் மண்டபம் வந்தவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காரில் வந்தவரை இருபுறம் திரண்டிருந்த பாஜகவினர் ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்றனர்

பின்னர் ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திடலில் நடைபெற்ற கூட்டத்தில் அமித்ஷா கலந்துக்கொண்டார். விழா மேடைக்கு அவரை பாஜக, கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்றனர். கூட்டத்தில் அதிமுக சார்பில் ஆர். பி. உதயகுமார், தமாகா தலைவர் ஜி கே வாசன், ஜான் பாண்டியன், பாரிவேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் குடும்ப மற்றும் ஊழல் ஆட்சி நடப்பதாகவும், மோடி ஆட்சியில் எல்லா குடும்பங்களும் நாட்டில் சிறப்படைந்துள்ளது எனவும் கூறினார்

கூட்டத்தில், பிரதமர் மோடி என்ன செய்தார் என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது

தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியபோது, திமுகவையும், காங்கிரசையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

எதிர்க்கட்சிகள், கூட்டணியின் பெயரை மாற்றுவதால் பயனில்லை என்றவர், அவர்கள் வாக்கு கேட்டு சென்றால் 2ஜி, காமன்வெல்த் ஊழல்கள் தான் மக்கள் நினைவுக்கு வரும் என விமர்சித்தார்.

அண்ணாமலை யாத்திரை உலகிற்கே தமிழை கொண்டு செல்லும் யாத்திரை எனவும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஏழைகளுக்கான ஆட்சியை கொண்டுவருவதற்கான யாத்திரை எனவும் குறிப்பிட்டார் அமித்ஷா...


Next Story

மேலும் செய்திகள்