கணவனை கொல்ல தானே ஆடைகளை கிழித்துக்கொண்டு கூச்சலிட்ட மனைவி - போலீசாரையே மிரள விட்ட பயங்கரம்

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வென்றிலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வைரவசாமி-முத்துமாரி தம்பதி.

முத்துமாரி வீரசிகாமனி கிராமத்தை சேர்ந்த 29 வயதான இளைஞர் இசக்கிமுத்து என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் மனைவியின் கள்ளக்காதல் குறித்து கணவர் வைரவசாமிக்கு தெரியவர, அவர் இது குறித்து பலமுறை கண்டித்ததாக தெரிகிறது.

கணவரின் பேச்சை சற்றும் கண்டு கொள்ளாத மனைவி, கள்ளக்காதலனுடனான தொடர்பை கைவிட மறுத்ததாக தெரிகிறது. இதுக்குறித்து கணவன் - மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

ஒருகட்டத்தில் கணவனின் கண்டிப்பை தொல்லை என கருதிய முத்துமாரி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.

அந்த திட்டத்தின் படி, பணி முடிந்து கணவன் - மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கள்ளக்காதலைனையும், அவரது கூட்டாளிகளையும் வழிப்பறி கொள்ளையர்கள் போல வரச் செய்த முத்துமாரி, கணவரை கத்தியால் குத்தி கொலைசெய்துவிட்டு, நகைகளை கள்ளக்காதலனிடம் கழற்றி கொடுத்துவிட்டு, தனது உடைகளையும் ஆங்காங்கே கிழித்து விட்டுக் கொண்டு கூச்சலிட்டதாக தெரிகிறது.

வழிப்போக்கர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் வைரவசாமியின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், முத்துமாரி முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

காவல்துறையினரின் கவனிப்பிற்கு பிறகு முத்துமாரி உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து முத்துமாரியை கைது செய்த போலீசார், அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் கள்ளக்காதலன் இசக்கிமுத்து, அவரது கூட்டாளிகள் காளிராஜ், அங்குராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்